தங்கள் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற உத்திரவாதம் கொடுத்த வட்டாச்சியருக்கு, மக்கள் மலர் கொடுத்து அகல்விளக்கு கொடுத்து நன்றி தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சில இடங்களில் வன்முறை வெடித்து, தடியடி நடத்தும் அளவுக்கு போய்விடுகிறது. ஆனால், திருநெல்வேலி மாவட்டம் கடையம் ஒன்றியத்தில் உள்ள மயிலப்பபுரம் கிராம மக்கள், தங்கள் ஊரில் உள்ள மதுக்கடையை அகற்ற காந்திய வழியில் போராட்டம் நடத்தினார்கள்.
ராட்டை நூற்பு, ரத்ததான முகாம், கண் தான முகாம், மருத்துவ முகாம் என தினம் தினம் வித்தியாசமான போராட்டத்தை நடத்தி வந்தனர். போராட்டம் தொடங்கிய மூன்று நாட்களில் ஆலாங்குளம் தாசில்தார், போராட்ட பந்தலுக்கே வந்து, ஜூலை 20ம் தேதிக்குள் மதுக்கடையை அங்கிருந்து அப்புறப்படுத்துவதாக எழுத்துப்பூர்வமாக உத்திரவாதம் கொடுத்தார்.
இந்நிலையில், மயிலப்பபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இன்று தாசில்தார் அலுவலகம் வந்தனர். அனைவர் கையிலும் ரோஜா பூவும், அகல் விளக்கும் இருந்தது. தாசில்தார் அறைக்குச் சென்ற அவர்கள், தாசில்தாரிடம் பூக்களையும் அகல்விளக்கையும் வழங்கினார்கள். எதற்காக இதை தருகிறீர்கள் என்று தாசில்தார் கேட்டதும், நாற்ற மிகு நச்சு மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுத்ததற்காக மணம்வீசும் மலர்களையும், பல குடும்பங்களில் இருள் பரவச் செய்த மதுக்கடையை அகற்ற உத்தரவாதம் தந்து, ஓளிபரவச் செய்ததற்காக அகல் விளக்கையும் காந்திய வழியில் வழங்கியதாக தெரிவித்தனர்.
இது குறித்து சமூக நல ஆர்வலர் பூ.திருமாறன் கூறியதாவது:
காந்திய வழியில் சத்தியாகிரகத்தின் மூலம் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று போராடினோம். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. மூன்றே நாட்களில் தாசில்தாரே நேரில் வந்து, கடையை அங்கிருந்து அப்புறப்படுத்துவதாக உத்திரவாதம் கொடுத்தார். அதையடுத்து போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.
எங்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்த தாசில்தாருக்கு நன்றி தெரிவிக்க, பெண்கள் பூங்களோடும் அகல் விளக்குகளோடும் தாசில்தாரை சந்தித்தனர். அதோடு, வெங்காடம்பட்டி பஞ்சாயத்தில் எங்குமே மதுக்கடையை வைக்கக் கூடாது என்று கூடுதலாக ஒரு கோரிக்கையையும் வைத்தனர். தாசில்தாரும் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்துள்ளார் என்றார்.
பொது மக்கள் கொண்டு வந்த மலர்கள் தாசில்தார் அலுவலக மேஜை முழுவதும் நிரம்பி வழிந்தது.