சென்னை கிண்டில் ரூ.250 கோடியில் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதி பெயரை சூட்ட மு.க. ஸ்டாலின் முடிவு செய்தார்.
அதன்படி, இந்த மருத்துவமனையை திறந்துவைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. டெல்லி சென்று ஜனாதிபதி மாளிகையில் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்தார்.
இந்த நிலையில், பன்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் தேதி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (மே 24) தெரிவித்தார்.
எனினும், எந்தத் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை. இந்தத் தேதி மாற்றத்துக்கு குடியரசுத் தலைவரின் வருகை திடீரென ரத்து ஆனதே காரணம் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மா. சுப்பிரமணியன், “வரமுடியாது என புதிய தலைமுறை செய்தி சேனல் மட்டுமே கூறியுள்ளது. வர்றாங்க.. தேதி மாறும்” என்று பதிலளித்தார்.
எனினும் ஜனாதிபதி திரௌபதி முர்மு வருகை ரத்து ஆனது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விழா ஒன்றுக்கும் தி.மு.க. ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“