அரசுக்கு சொந்தமான 160 ஏக்கருக்கு செலுத்தவேண்டிய வாடகை பாக்கி, ரூ.730 கோடியை ஒரு மாதத்தில் செலுத்தும்படி இந்திய ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையின் வரலாற்று நினைவிடங்களில் ஒன்று கிண்டி ரேஸ் கிளப். 1777-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இந்த கிளப் தொடங்கப்பட்டது.
சென்னை கிண்டியில் அமைந்திருக்கும் இந்த ரேஸ் கிளப், 160 ஏக்கர் 86 சென்ட் பரப்பளவு கொண்டது. இதற்கு தமிழக அரசுக்கு கிடைக்கும் வாடகை தொகை ஆண்டுக்கு ரூ.614.13 ஆகும்.
ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு வெளியேறிய போது, தனியார் நிர்வாகத்திடம் இந்த ரேஸ் கிளப்பை ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், 1970 ஆம் ஆண்டு டிசம்பரில் வாடகையை உயர்த்த மாம்பலம்-கிண்டி தாசில்தார் நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால், நோட்டீஸுக்கு பதிலளித்த ரேஸ் கிளப், 1946 ஒப்பந்தத்தில் வாடகை உயர்த்துவது குறித்த பிரிவு எதுவும் இல்லை என்றது.
விளக்கத்தை நிராகரித்த அரசு, ரேஸ் கிளப் ரூ.730.86 கோடி வாடகை பாக்கியை செலுத்தும்படி உத்தரவிட்டது. இதனை கிளப் நிர்வாகம் எதிர்த்தது.
2017ஆம் ஆண்டு வாடகை பாக்கிக்காக மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியும் கண்டுகொள்ளாத நிர்வாகம், ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளையும் அனுமதிக்காமல் இருந்தது.
காவல்துறை உதவியுடன் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அங்கு சட்டவிரோதமாக விதிமுறைகளை மீறி கட்டுமானங்கள், கிளப் விடுதிகள் என கிளப் நிர்வாகம் தனி சம்பிராஜ்யம் செய்வதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது கிளப்பின் வங்கி கணக்கை மாவட்ட நிர்வாகம் முடக்கியது. சுற்றியிருக்கும் அபார்ட்மெண்டுகள், கிளப் இடத்தை ஆக்கிரமித்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதன்பின், வாடகையை அதிகரிக்கும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து, கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றம் சென்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகை உயர்த்த அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி, ரூ.730.86 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
இந்த தொகையை செலுத்த தவறினால், மனுதாரரை காவல்துறை உதவியுடன் வெளியேற்றி, நிலத்தை அரசு எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil