கிண்டி ஆளுநர் மாளிகையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.
நேற்று (அக். 25) மதியம் 2.45 மணி அளவில் ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இந்த செயலில் ஈடுபட்ட ரவுடி கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022ம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றதும், ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில் விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிகிறது.
பிறகு, ரவுடி கருக்கா வினோத்தை நவம்பர் 9ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் இன்று காலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஆளுநரின் துணைச் செயலர் செங்கோட்டையன் சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு புகார் மனு அனுப்பினார்.
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இன்று மாலை சென்னை வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“