குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தையடுத்து, சென்னை பெருநகர காவல் துறை ஆணியரிடம், ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் துணைச் செயலர் செங்கோட்டையன் சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், ‘புதன்கிழமை (அக்.25) அன்று மதியம் 2.45 மணி அளவில் ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
முதல் குண்டு பிரதான வாயிலில் விழுந்து வெடித்த நிலையில், அந்த குண்டு வெடிப்பு சத்தம் அப்பகுதி முழுவதும் எதிரொலித்தது.
பாதுகாப்பு வீரர்கள் குண்டு வீசியவரை மடக்கிப் பிடித்த நிலையில், மேலும் ஒரு குண்டு வீசப்பட்டது. இதில், பிரதான வாயில் கதவு சேதமடைந்துள்ளது. குண்டு வீசியவர்களில் ஒருவர் பிடிபட்டுள்ளார்.
பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் விழிப்புடன் செயல்பட்ட காரணத்தால் பெரிய அளவிலான அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாகவே தமிழக ஆளுநருக்கு எதிராக அவதூறான பிரசாரங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக. திமுக-வை சேர்ந்த மூத்த நிர்வாகிகளே தாங்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களில் ஆளுநருக்கு எதிராக சவால்களை விடுத்து வருகின்றனர்.
எனினும். இது தொடர்பான புகார்கள் மீது காவல்துறை எவ்வித தொடர் நடவடிக்கையும் எடுக்காமல் செயலற்று இருக்கிறது.
கடந்த 2022-ல் தருமபுரம் ஆதீன நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த ஆளுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்தோம். ஆனால், எஃப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை. புகார் மீது காவல் துறை எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
மொத்தத்தில் பொதுவெளியில் ஆளுநருக்கு எதிரான அச்சுறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதன் விளைவுதான் தற்போது ஆளுநர் மாளிகை மீது நடத்தப்பட்டுள்ள பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல். வாய்மொழி தாக்குதல், அச்சுறுத்தல் போன்றவை எல்லாம் கடந்து தற்போது பெட்ரோல் குண்டு ஆளுநர் மாளிகையில் வீசப்பட்டுள்ளது.
ஆளுநர் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பணியாற்ற முடியாது.
எனவே, இந்த குற்ற நிகழ்வு குறித்து உடனடியாக காவல் ஆணையர் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள சதிகாரர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதே நேரத்தில் ஆளுநருக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் ’, என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை நவம்பர் 9ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் இன்று காலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“