/indian-express-tamil/media/media_files/2025/10/09/cough-syrups-made-in-gujarat-2025-10-09-08-07-33.jpg)
அபாயகரமான ரசாயனம் கலப்பு அச்சம்: தமிழகத்தில் 2 இருமல் மருந்துகளுக்குத் தடை
மத்தியப் பிரதேச அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, குஜராத்தில் தயாரிக்கப்பட்ட 2 இருமல் மருந்துகளான 'Relife' மற்றும் 'Respifresh TR' ஆகியவற்றை வாங்குவது, விற்பது மற்றும் பயன்படுத்துவதற்கு எதிராகத் தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரிக்கை விடுத்து, அவற்றிற்கு தடை விதித்துள்ளது.
அபாயகரமான ரசாயனம் கலப்பு அச்சம்:
இந்த 2 மருந்துகளும் டிச.2026-ல் காலாவதியாகும் தொகுப்பைச் (Batch) சேர்ந்தவை. இந்தத் தொகுப்பில், சென்னை இருமல் மருந்தில் கலந்திருந்த நச்சுப்பொருளான டயெத்திலீன் கிளைக்கால் (Diethylene glycol) கலந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நச்சுப்பொருள், மத்திய பிரதேசத்தில் 21 குழந்தைகள் உயிரிழக்கக் காரணமாக அமைந்தது.
மத்தியப் பிரதேச அரசின் மருந்து பரிசோதனை ஆய்வகத்தில் Relife மற்றும் Respifresh TR மருந்துகள் "தரமற்றவை" (Not of Standard Quality) என்று கண்டறியப்பட்டதாகத் தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் துணை இயக்குநர் குருபாரதி தெரிவித்தார். இந்தக் கடுமையான சுகாதார அபாயத்தை கருத்தில் கொண்டு, இந்த 2 மருந்துகளின் கொள்முதல், விற்பனை மற்றும் நுகர்வுக்கு அவர் வெளிப்படையாக தடை விதித்துள்ளார்.
தமிழகத்தில் நடைமுறைகள்:
தமிழகத்தில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் உடனடியாக இந்தத் தொகுப்பு மருந்தை இருப்பு வைக்காமல் அகற்றவும், விநியோகம் செய்யப்பட்ட (அ) விற்கப்பட்ட விவரங்களைப் புகாரளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. நுகர்வோர், மருந்துகளின் தொகுப்பு விவரங்களைச் சரிபார்த்து, இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
யாரிடமாவது இந்தப் பொருட்கள் இருந்தால், முறையான அகற்றலுக்காக மருந்து அதிகாரிகளிடம் திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்று குரு பாரதி கூறியுள்ளார். இந்த மருந்தை உட்கொண்டிருக்கக்கூடிய நோயாளிகளுக்கு டயெத்திலீன் கிளைக்கால் நச்சுக்கான அறிகுறிகள் உள்ளனவா என்பதைக் கண்காணிக்கவும் சுகாதாரப் பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
'Coldrif' மருந்து பறிமுதல்; உற்பத்தியாளர் மீது கிரிமினல் வழக்கு
இதற்கிடையில், தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் கடைகளில் வைக்கப்பட்டிருந்த 100 'Coldrif' இருமல் மருந்து புட்டிகளைப் பறிமுதல் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை உற்பத்தி செய்த ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் (Sresan Pharmaceuticals) நிறுவனத்தின் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. "நிறுவனத்திற்கு நாங்க விளக்கம் கேட்டு நோட்டீஸ் (show-cause notice) அனுப்பியுள்ளோம். அந்த இடம் மூடப்பட்டிருந்ததால், கதவுகளிலும், உரிமையாளரின் இல்லத்தின் கதவுகளிலும் அந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது" என்று குருபாரதி கூறினார். "உற்பத்தியாளருக்கு எதிரான கிரிமினல் குற்றப்பத்திரிகை (chargesheet) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்குக் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம் என்றும், மேலும் ரூ.10 லட்சத்திற்குக் குறையாத அபராதமும் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறி உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.