குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து புறப்பட்டு திருச்சி நோக்கி வந்த சிறப்பு ரயிலுக்கு வெள்ளிக்கிழமை (அக்.28) அதிகாலை கும்பகோணத்தில் பயணிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தஞ்சை, குடந்தை வழியாக மும்பைக்கு நேரடி ரயில் இயக்க பல ஆண்டுகளாக தஞ்சாவூர் மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் மற்றும் வணிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதேபோல் ராகவேந்திரா சுவாமிகளின் பரமகுருவான விஜயேந்திர சுவாமிகளின் மடம் அமைந்துள்ள குடந்தை நகரம் , ராகவேந்திரர் மடம் அமைத்துள்ள மந்த்ராலயம் நகரம் மற்றும் ராகவேந்திரர் அவதார ஸ்தலமான புவனகிரி அருகே உள்ள சிதம்பரம் நகரம் வழியாக நேரடி ரெயில் இயக்க வேண்டும் என ராகவேந்திரா சுவாமிகள் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
-
கும்பகோணத்தில் சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு
இதையடுத்து அகமதாபாத் – ராமேஸ்வரம் இடையே ஒரு புதிய வாராந்திர ரெயில் இயக்க கொள்கை அளவில் கடந்த ஜூன் மாதம் ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
இந்நிலையில் கும்பகோணத்திற்கு ஜூன் மாத இறுதியில் வருகை புரிந்த மந்த்ராலயம் ராகவேந்திரர் மட பீடாதிபதி ஸூபுதேந்திர தீர்த்த சுவாமிகளிடம் இந்தக் கோரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உத்தேசிக்கப்பட்டிருந்த அகமதாபாத் – ராமேஸ்வரம் இடையேயான புதிய ரெயிலை மந்த்ராலயம், சிதம்பரம், கும்பகோணம், திருச்சி ஆகிய
ஸ்ரீ ராகவேந்திரரின் மடங்கள் அமைந்துள்ள ஊர்கள் வழியாக இயக்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே துறை அமைச்சருக்கு விஜயேந்திர சுவாமிகள் மடத்தின் சார்பில் ஒரு கோரிக்கை மனு ஒன்று பிரத்யேகமாக கடந்த ஜூன் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது.
அக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தற்போது அக்டோபர் 27ஆம் தேதி முதல் அகமதாபாத் நகரில் இருந்து மந்த்ராலயம் சென்னை சிதம்பரம் கும்பகோணம் வழியாக திருச்சிக்கு ஒரு புதிய சிறப்பு ரயிலை இயக்குவதற்கு மேற்கு மண்டல ரெயில்வே முடிவு செய்தது.
தொடர்ந்து, இந்தச் சிறப்பு ரெயில் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு அகமதாபாத்தில் புறப்பட்டு சூரத், கல்யாண்(மும்பை), பூனே,மந்த்ராலயம் ரோடு, சென்னை எழும்பூர் வழியாக குடந்தைக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு வந்து சேர்ந்தது.
அகமதாபாத்திலிருந்து குடந்தைக்கு நள்ளிரவில் வந்த புதிய விருந்தாளி ரெயிலை பயணிகள் , அனைத்து வணிகர் சங்கத்தினர் மற்றும் விஜயேந்திர சுவாமிகள் பக்தர்கள், , உற்சாகமாக வரவேற்றனர்.
விஜயேந்திர சுவாமிகள் மடத்தின் சார்பில் சிறப்பு ரெயில் வண்டி இன்ஜினுக்கு பிரசாத மாலை அணிவிக்கப்பட்டு . ரெயிலை இயக்கி வந்த ஓட்டுனர்கள் ஸ்டேன்லி அப்ரஹாம், செல்வ விநாயகம் மற்றும் ரெயில் மேலாளர்(கார்டு) சுதாகர் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் ஏ. கிரி, குடந்தை அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சி. மகேந்திரன், செயலாளர் வி. சத்தியநாராயணன்,
பொருளாளர் மு.கியாசுதீன் விஜயேந்திர சுவாமிகள் மடம் மேலாளர் நரசிம்மன், பிரதிநிதி விஷ்ணு பாலாஜி, பா ஜ க தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ், குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு துணைத்தலைவர் ரமேஷ்ராஜா, துணைச் செயலாளர்கள் வேதம் முரளி, கே.அண்ணாதுரை செயற்குழு உறுப்பினர்கள், S.கணேசன் A.ராமச்சந்திரராஜா கே.தனசேகர் பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு ரயில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமைகளில் அகமதாபாத்தில் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு குடந்தை வந்து சனிக்கிழமை அதிகாலை 3.15 மணிக்கு திருச்சி சென்றையும்.
மறு மார்க்கத்தில் ஞாயிற்று கிழமைகளில் திருச்சியில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு குடந்தை, சென்னை எழும்பூர், வழியாக அகமதாபாத்துக்கு மறுநாள் இரவு 9.15 மணிக்கு சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில் நவம்பர் மாத இறுதி வரை இயங்கும் எனவும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இதன் இயக்கம் பின்னர் நீட்டிக்கப்பட கூடும் எனவும் ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
பக்தி எக்ஸ்பிரஸ்
இந்த ரயில் அகமதாபாத் (துவாரகை) ஜோதிர்லிங்கம், மந்த்ராலயம், திருப்பதிக்கு அருகில் உள்ள ரேணிகுண்டா, சிதம்பரம் , சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட ஆன்மீக தலங்கள் வழியாக இயக்கப்படுவதால் இந்த ரயிலுக்கு “பக்தி எக்ஸ்பிரஸ்” என பெயர் சூட்ட வேண்டும் என்று பயணிகள் கருத்து தெரிவித்தனர்.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil