Advertisment

முடிவுக்கு வந்த தீண்டாமை: கும்மிடிப்பூண்டி கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பின் பட்டியலின மக்கள் சாமி தரிசனம்

Gummidipoondi amman temple- மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், எஸ்.பி- ஸ்ரீனிவாசபெருமாள் முன்னிலையில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

author-image
WebDesk
New Update
Gummidipoondi amman temple

Gummidipoondi

கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு எட்டியம்மன் கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பின் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது எட்டியம்மன் கோயில். இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோயிலிலில் கடந்த 2002-ம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அப்போது, பட்டியலின மக்கள், மாற்று சமூகத்தினர் என இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து, 2011-ம் ஆண்டு கோயில் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில், 22 ஆண்டுகள் கழித்து அரசு அனுமதி வழங்கியபடி, எட்டியம்மன் கோயிலுக்கு கடந்த மாதம் 9-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து அரசு வழிகாட்டியபடி, காலை வேளையில் மாற்று சமூகத்தினர் கோயிலில் வழிபாடு செய்தனர்.

பிறகு, பகல் வழிபாட்டிற்கு வந்த ஆதிதிராவிட மக்களை வேறு சமூகத்தினா் தடுத்து வழிபாடு நடத்த விடாமல் திருப்பி அனுப்பியதால், இரு தரப்பினருக்கும் மோதல் வெடித்தது. தொடா்ந்து பொன்னேரி சார் ஆட்சியா் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில் எட்டியம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து ஆதிதிராவிட சமூகத்தினா், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரோடு பல கட்ட போராட்டங்களை நடத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தொடர்ந்து இந்த பிரச்சினை தொடர்பாக, கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரு பிரிவினரும் பங்கேற்ற அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில், சுமுக தீர்வு எட்டப்பட்டது. இதையடுத்து, கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் ஒரு மாதத்துக்குப் பிறகு திங்கள்கிழமை காலை வருவாய்த் துறையினரால் அகற்றப்பட்டு கோயில் கதவுகள் திறக்கப்பட்டது.

தொடர்ந்து, கோயிலுக்கு ஊர்வலமாக வந்த 200-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களை, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். பிறகு, எட்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், எஸ்.பி- ஸ்ரீனிவாசபெருமாள் முன்னிலையில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பிறகு, செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பேசுகையில், ’இருபிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கோயிலைப் பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில், இரு பிரிவினரையும் அழைத்து சமாதானப்படுத்தி ஊருக்குள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இரு பிரிவினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து முதற்கட்டமாக தற்போது எட்டியம்மன் கோயிலின் சீல் அகற்றப்பட்டு சுமுக தீர்வு காணப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் இரு பிரிவினரிடையே பிரச்சினை ஏற்படாத வகையில் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், வழுதலம்பேடு கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில், கோயிலுக்கு வரும் சாலை, கோயில் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள ரூ.76 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’, எனத் தெரிவித்தார்.

23 ஆண்டுகள் கழித்து எட்டியம்மனை வழிபட்ட மக்கள் ஆட்சியா் பிரபு சங்கருக்கும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்தனா்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment