தூத்துக்குடியில் 10ஆம் வகுப்புத் தேர்வு வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறையில் காவலரின் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 மற்றும் 11 வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைப்பெற்று வருகிறது. மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள்கள், அடுத்தடுத்து வரும் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஆகியவை அரசுப் பள்ளி அறையில் பாதுகாப்பாக வைக்கப்படும். இந்த அறைக்கு தனியாக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நிற்பது வழக்கம்.
இந்நிலையில், தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில், தற்போது 11, 12-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள்கள், அடுத்தடுத்து வரும் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஆகியவை இப்பள்ளியில் உள்ள அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
நேற்றயை தினம், 10-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் மதுரையிலிருந்து இப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வினாத்தாள்கள் வைக்கப்பட்ட அறைக்கு ஆயுதப்படையைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணன் என்ற காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டார்.
அப்போது அவர், பெஞ்சில் அமர்ந்து தன் துப்பாக்கியைத் துணியால் துடைத்துக்கொண்டிருக்கும்போது கை தவறி, துப்பாக்கியிலிருந்து தோட்டா சத்தத்துடன் வானத்தை நோக்கி வெளியேறி வெடித்தது, இதனால், மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதில் யாருக்கும் காயம் இல்லை.
இதனையடுத்து, காவலர் அனந்தகிருஷ்ணனைக் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.மாவட்ட எஸ்.பி மகேந்திரன் மற்றும் போலீஸார் பள்ளிக்குச் சென்று சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். திடீரென துப்பாக்கி வெடித்ததால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது