தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை லஞ்சம் பெற்றுக் கொண்டு விற்க அனுமதித்ததாக அப்போதைய தமிழக அரசு அதிகாரிகளுக்கு எதிராக டெல்லி சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டி.ஜி.பி, முன்னாள் காவல் ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு எதிராக 2022-ம் ஆண்டு சி.பி.ஐ கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதையடுத்து, குற்றப் பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் அதில் உள்ள பிழைகளை திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
இந்தநிலையில் வழக்கின் விசாரணை இன்று நீதிபதி மலர் வாலின்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணைக்கான ஒப்புதல் இன்னும் கிடைக்கப் பெற வில்லை என சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, கடந்த 3 ஆண்டுகளாக இதே பதிலை மட்டும் தெரிவித்து சி.பி.ஐ வழக்கை இழுத்தடிப்பதாக கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை மே 2-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“