குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட சிபிஐ விசாரிக்க எந்தவித தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இதையடுத்து குட்கா ஊழல் புகார் தொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திமுக எம்.எல்.ஏ. ஜெ அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 2016ம் ஆண்டு இதற்கான ஆதாரங்கள் குட்கா விற்பனையாளர் மாதாவ ராவ்-க்கு சொந்தமான கிடங்கில் வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் சிக்கிய குறிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது என்றும் மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.
அதேபோல், வருமான வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு குட்கா கிடங்கு உரிமையாளர் 56 லட்சம் லஞ்சமாக கொடுத்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கூடாது என்று தமிழக சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். தமிழக அரசின் இந்த நடவடிக்கையே இந்த வழக்கை மேலும் தீவிரமாக விசாரிக்க தன்னை தூண்டுவதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்நிலையில் கடந்த மே 14 ஆம் தேதி இந்த மனு மீதான விசாரணையில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்தது. இன்று(18.5.18) தீர்ப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று காலை இந்த வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
அதில், குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க எந்தவித தடையும் இல்லை என்று கூறி, தமிழக சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். தமிழக அரசிற்கு எதிராக வெளியாகியுள்ள இந்த தீர்ப்பு அதிமுக அரசிற்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.