தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் குட்கா போதைப் பாக்குகளை விற்பனை செய்ய தடைச் சட்டம் கொண்டு வந்தார் முதல்வராக இருந்த ஜெயலலிதா. ஆனாலும் தமிழகத்தில் குட்கா போதைப் பாக்குகள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இதற்காக பல கோடி ரூபாய் அமைச்சர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கை மாறியதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் 2016-ம் ஆண்டு குட்கா தயாரிப்பாளர் மாதவராவ் வீடு, செங்குன்றம் குட்கா குடோன் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தியது.
இந்த சோதனையின் போது மாதவராவின் டைரி ஒன்றும் சிக்கியது. அதில்தான் யார் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்கிற விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து மாதவராவிடம் லஞ்சம் பெற்ற அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது.
வருமான வரித்துறையின் இக்கடிதம் ஊடகங்களில் வெளியானது. ஆனால் தமிழக அரசோ இப்படி ஒரு கடிதமே வரவில்லை என சாதித்தது. இதையடுத்து திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
வருமான வரித்துறையின் கடிதத்தை முன்வைத்து குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி இந்த வழக்கு தொடரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு குட்கா வியாபாரி மாதவராவ் உட்பட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாதவராவ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மத்திய புலனாய்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய உதவியாளர் சரவணன் ஆகியோரை நேரில் வந்து விளக்கம் அளிக்க அழைப்பாணை விடப்பட்டது.
சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜரான அமைச்சரின் உதவியாளர்
இந்த நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் சரவணன் நேரில் ஆஜரானார். கடந்த 7ம் தேதி விசாரணைக்காக ஆஜரான நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.