குட்கா ஊழல் விவகாரத்தில் சிபிஐ கைது வேட்டை தொடங்கியது. குட்கா அதிபர் மாதவராவ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது.
குட்கா ஊழல், தமிழ்நாடு அரசியலை உலுக்கி வருகிறது. 2013 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்ற போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் விற்றது தொடர்பான வழக்கு இது!
2016-ம் ஆண்டு சென்னையை அடுத்த செங்குன்றத்தில் குட்கா குடோனில் மத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, இந்த ஊழல் வெளியே தெரிய வந்தது. அங்கு கைப்பற்றப்பட்ட டைரி ஒன்றில், அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்ட விவரம் தெரிய வந்தது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ, குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தியது. நேற்று (செப்டம்பர் 5) தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் (டிஜிபி) டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் இல்லங்கள் உள்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்தச் சூழலில் இன்று இதில் அடுத்தகட்டமாக கைது நடவடிக்கையை சிபிஐ தொடங்கியது. அதன்படி குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர் உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் பி.செந்தில் முருகன், மத்திய கலால்துறை கண்காணிப்பாளர் என்.கே.பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முதல்கட்டமாக 4 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது. இதனால் இதில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஐபிஎஸ், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோருக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது.
இதற்கிடையே குட்கா வழக்கில் கைதான அனைவரையும் டெல்லிக்கு அழைத்துச் செல்ல சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதேபோல அமைச்சர் மற்றும் ஐபிஎஸ்.களையும் டெல்லிக்கு வரும்படி சம்மன் அனுப்பப்படும் எனத் தெரிகிறது. இதனால் இந்த விவகாரத்தில் பரபரப்பு கூடியபடியே இருக்கிறது.