குட்கா ஊழல் விசாரணையில் சசிகலாவும் சிக்குகிறார். பெங்களூரு சிறையில் இருக்கும் அவரையும் சிபிஐ அதிகாரிகள் விசாரிப்பார்கள் என தெரிய வருகிறது.
குட்கா ஊழல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 26) சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. வெகு விரைவில் மாநில லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் இருந்து முறைப்படி சிபிஐ அதிகாரிகள் ஆவணங்களை பெற்றுக்கொண்டு விசாரணையை தொடங்குவார்கள்.
குட்கா ஊழல் விசாரணையில் சிபிஐ-க்கு துருப்புச் சீட்டாக அமையவிருப்பவை வருமான வரித்துறையின் ஆவணங்கள்தான்! தமிழ்நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டு குட்கா விற்பனையை அரசு தடை செய்தது. ஆனாலும் சட்ட விரோதமாக குட்கா விற்பனை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் சென்னையை அடுத்த செங்குன்றத்தில் ஒரு பிரபல குட்கா நிறுவன குடோனில் கடந்த 2016 ஜூலை 8-ம் தேதியன்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கிடைத்த டைரியில், முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு குட்கா விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் வழங்கியதற்கான குறிப்புகள் இருந்தன.
குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய சென்னை மாநகர ஆணையரும் தற்போதைய டிஜிபி.யுமான டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆகியோருக்கும் லஞ்சம் வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. குட்கா விற்பனையாளர்களில் ஒருவரான மாதவராவிடம் வருமான வரித் துறையினர் விசாரித்தபோது, கடந்த 01.04.16 முதல் 15.06.16 வரையிலான காலகட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கருக்கு ரூ. 56 லட்சம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இவற்றின் அடிப்படையில் குட்கா ஊழலில் தொடர்புள்ள நபர்களின் பட்டியலை தயாரித்த வருமான வரித் துறை, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 11.08.16 அன்று அப்போதைய தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு தனித்தனியாக ரகசிய கடிதம் அனுப்பி வைத்தனர். அப்போதைய டிஜிபி ராமானுஜம் இது தொடர்பான குறிப்புகளுடன் கடிதம் ஒன்றை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியிருக்கிறார்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு, கடந்த 17.11.17 அன்று போயஸ் தோட்டத்தில் வி.கே.சசிகலா அறையில் வருமான வரித்துறை சார்பி்ல் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, குட்கா ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு முன்னாள் டிஜிபி அனுப்பிய ரகசிய கடிதம் அங்கு கைப்பற்றப்பட்டது.
முதல்வர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கு டிஜிபி எழுதிய கடிதம் சசிகலா அறையில் கிடைத்தது எப்படி? உண்மையிலேயே அந்தக் கடிதம் ஜெயலலிதா பார்வைக்கு சென்றதா? குட்கா ஊழல் தொடர்பான டிஜிபி.யின் ரகசிய கடிதத்தை சசிகலா தனது அறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? என்கிற கேள்விகள் இந்த விவகாரத்தில் எழுகின்றன.
தற்போது குட்கா ஊழல் விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டிருக்கும் சூழலில், மேற்படி கேள்விகளுக்கு சசிகலா பதில் சொல்ல வேண்டியவர் ஆகிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவிடம், சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் சிபிஐ இது குறித்து விசாரிக்கும் என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள்! எனவே அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோருடன் சசிகலாவுக்கும் இந்த விவகாரம் நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிகிறது.
தவிர, இந்த விவகாரத்தில் குட்கா விற்பனையாளர்கள் சிபிஐ விசாரணையில் சொல்லவிருக்கும் தகவல்கள் அடிப்படையில் மேலும் பல பெருந்தலைகள் உருள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. குட்கா ஊழல் விசாரணையில் சிபிஐ துடிப்பாக இறங்கும் பட்சத்தில் அரசியலிலும் அதிகார மட்டத்திலும் பெரும் பூகம்பங்கள் உருவாகலாம்!