Tamil Nadu Gutkha Scam: குட்கா ஊழல் தொடர்பாக தமிழ்நாட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், ஜார்ஜ் ஐபிஎஸ் ஆகியோர் இல்லங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. மொத்தம் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இதனால் அரசு வட்டாரம் ஆடிப் போயிருக்கிறது.
குட்கா ஊழல், தமிழகத்தில் அரசியல்வாதிகளை மட்டுமல்ல, முக்கிய அதிகாரிகளையும் சிக்கலில் ஆழ்த்துகிறது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ இது குறித்து விசாரித்து வருகிறது.
குட்கா குடோன் உரிமையாளரான மாதவராவை விசாரணைக்கு சிபிஐ அழைத்திருக்கிறது. அவரது குடோன்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையும் நடத்தினர். அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் குட்கா ஊழல் தொடர்பாக தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 5) ஒரே நாளில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, முகப்பேரில் உள்ள டிஜிபி வீடு, முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் முடிவுகள் மாலையில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குட்கா ஊழல் - சிபிஐ சோதனை LIVE UPDATES
2:30 PM: குட்கா ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருவதால், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது. சிபிஐ சோதனையைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவாகி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. எனவே அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கிற குரல் பல முனைகளில் இருந்தும் எழுகிறது.
அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக நேர்ந்தால், முன்பு சுகாதாரத் துறையை வகித்தவரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான செம்மலைக்கு அந்த இலாகாவை வழங்க வேண்டும் என்கிற கருத்துகளும் முன் வைக்கப்படுகின்றன. ஆனால் ஒருவேளை விஜயபாஸ்கர் பதவி விலகினால், முதல்வரே அந்த இலாகாவை வைத்துக்கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது.
1:50 PM: குட்கா முறைகேடு தொடர்பாக பெங்களூரு, மும்பை மற்றும் புதுச்சேரியிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அமைச்சர் மற்றும் உயர் காவல் அதிகாரில் இல்லங்களில் சோதனை நடைபெறுவதால் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் மூத்த அதிகாரிகளை அழைத்து இது குறித்து ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
1:30 PM : அமைச்சர் மற்றும் டிஜிபி இல்லங்களில் நடைபெற்ற சிபிஐ சோதனை தமிழ்நாட்டுக்கு தலைகுனிவு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து கூறியிருக்கிறார்.
1:15 PM : ‘இனியும் தாமதிக்காமல் அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
1:00 PM: சிபிஐ சோதனை நடைபெறும் விஐபி.க்களின் வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்தில் நடைபெறும் சோதனையையொட்டி வீட்டை படம் எடுக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
Tamil Nadu Gutkha Scam: குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ சோதனையில் சிக்கிய சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஐபிஎஸ் இல்லம்
12:45 PM: உயர் அதிகாரிகள் இல்லங்களில் நடைபெறும் சோதனை ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகிய இடங்களில் இதைப் பற்றிய பேச்சாகவே இருக்கிறது.
Tamil Nadu Gutkha Scam: குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ சோதனையில் சிக்கிய தமிழ்நாடு போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இல்லம்
12:20 PM: வரலாற்றில் முதல் முறையாக மாநிலத்தின் தலைமை காவல் அதிகாரியான டிஜிபி இல்லம் மற்றும் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தப்படுகிறது. டிஜிபி ராஜேந்திரனின் முகப்பேர் இல்லம், சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ் இல்லம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம் ஆகிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.