குட்கா வழக்கில் சிபிஐ சோதனை: அமைச்சர், டிஜிபி பதவிகளுக்கு ஆபத்தா?

குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

Tamil nadu gutkha scam: குட்கா ஊழலில் அமைச்சர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்கியது எப்படி? சிபிஐ சோதனையின் முழு பின்னணி என்ன? இந்த விவகாரம் அமைச்சர் மற்றும் டிஜிபி பதவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு?

குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தடை விதித்தார். ஆனாலும் சட்டத்திற்கு புறம்பாக தமிழ்நாடு முழுவதும் பெட்டிக் கடைகளில் குட்கா விற்பனை நடைபெற்றது.

குட்கா தொடர்பான புகார் எழுகிற வேளைகளில் மட்டும் உணவு பாதுகாப்புத் துறையினரும், போலீஸாரும் பெயரளவுக்கு ரெய்டு அடிப்பதும், விற்பனை தொடர்வதுமாக இருந்தது. மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகளான வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு ஆகியன சட்டவிரோத குட்கா பிசினஸில் புரளும் கரன்சிகளை மோப்பம் பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் குட்கா மொத்த வர்த்தகரான மாதவராவுக்கு சொந்தமான குடோன்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கிடைத்த டைரிதான் இந்த விவகாரத்தின் முக்கிய துருப்புச் சீட்டு!

அந்த டைரியில் சட்ட விரோத குட்கா விற்பனைக்காக யார், யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது? என்கிற புள்ளிவிவரங்கள் துல்லியமாக இருந்தன. குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனரும் தற்போதைய டிஜிபி-யுமான டி.கே.ராஜேந்திரன் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றன.

இது தொடர்பான குறிப்புகளை மத்திய வருமான வரித்துறை, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்கு அனுப்பியது. ஆனால் அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் இதில் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என சர்ச்சை எழுந்தது.

அப்போதைய டிஜிபி அசோக் குமாருக்கும், வருமான வரித்துறை இது தொடர்பாக கடிதம் அனுப்பியது. டிஜிபி அசோக் குமார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதை அனுப்பி வைத்தார். அந்தக் கடிதம்தான் சில மாதங்களுக்கு முன்பு போயஸ் கார்டனில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது சசிகலா அறையில் சிக்கியது.

இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளையும், உயர் அதிகாரிகளையும் ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதாக புகார் எழுந்ததால், இது குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கதிரேசன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஊழல் கண்காணிப்பு ஆணையர் விசாரிப்பதாக கொடுத்த உத்தரவாதம் அடிப்படையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதற்கிடையே திமுக எம்.எல்.ஏ.வும், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஜெ.அன்பழகன் இதில் சிபிஐ விசாரணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில், ‘சிபிஐ விசாரணை தேவையில்லை’ என தொடர்ந்து வாதிட்டு வந்தனர்.

ஒரு கட்டத்தில் வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ‘மாநில அரசு சிபிஐ விசாரணையை தடுக்க நினைப்பதைப் பார்த்தால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு அனுப்ப வேண்டியது அவசியம் எனத் தோன்றுகிறது’ என குறிப்பிட்டார். வெளிமாநில அதிகாரிகள் தொடர்புடைய இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உகந்தது என்றும் கருத்து தெரிவித்தார். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு, சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

இதற்கிடையே வருமான வரித்துறை நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் குட்கா குடோன் உரிமையாளர்கள் பல்வேறு உண்மைகளை கக்கினர். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ56 லட்சம் வழங்கியதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்! மேலும் தற்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஐபிஎஸ், சென்னை மாநகர முன்னாள் ஆணையரான ஜார்ஜ் (பணி ஓய்வு) ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்ததும், ஏற்கனவே வருமான வரித்துறை சேகரித்து வைத்திருந்த ஆவணங்கள் மிக உதவிகரமாக இருந்தன. இதனால் வழக்கின் வேகத்தை சிபிஐ அதிகரித்தது. கடந்த வாரம் மாதவராவுக்கு சொந்தமான குட்கா குடோன்களில் சிபிஐ-யும் சோதனை மேற்கொண்டது.

அதைத் தொடர்ந்துதான் இன்று (செப்டம்பர் 5) சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரின் இல்லங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை, பெங்களூரு, மும்பை, புதுச்சேரி, தூத்துக்குடி மற்றும் விழுப்புரம் என 35 இடங்களில் சிபிஐ சோதனை நடக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், கூடுதல் ஆணையர் மன்னன், காவல் ஆய்வாளர் சம்பத்குமார் ஆகியோர் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், லட்சுமி நாராயணன், சிவக்குமார் ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் குல்சார் பேகம், என்.கே.பாண்டியன், சேஷாத்ரி ஆகியோரும் இந்தச் சோதனையில் சிக்கியிருக்கிறார்கள். விற்பனை வரித்துறை அதிகாரிகள் பன்னீர்செல்வம், குறிஞ்சி செல்வம், கணேசன் ஆகியோரது வீடுகளிலும் சிபிஐ சோதனை நடந்திருக்கிறது.

முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் நடைபெற்ற சிபிஐ சோதனை மாலையில் நிறைவு பெற்றது. இந்தச் சோதனையில் என்னென்ன கிடைத்தன? என்கிற தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை. எனினும் சிபிஐ இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்பட்சத்தில் மேற்படி அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பெரும் நெருக்கடி காத்திருக்கிறது.

குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகுவது குறித்தும் திமுக தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close