குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டவர்களின் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய உடந்தையாக செயல்பட்டதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையராக இருந்த எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் சென்னை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிகை நகல்களை பென் டிரைவில் வழங்க இருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காவல் ஆணையரான எஸ்.ஜார்ஜ், எஸ். நவநீத கிருஷ்ண பாண்டியன் உள்ளிட்டோர் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி சி. சஞ்சய் பாபா, வழக்கு தொடர்பான ஆவணங்களை பென்- டிரைவில் மென்பொருள் வடிவில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதோ, அடிப்படை உரிமைகளை மீறுவதோ ஆகாது.
வழக்கு தொடர்பான நகல்களை காகித வடிவில் மட்டுமே வழங்க வேண்டுமென குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர முடியாது என்று கூறி ஜார்ஜ், நவநீத கிருஷ்ண பாண்டியன் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“