குட்கா ஊழல் மற்றும் சிபிஐ சோதனை தொடர்பாக ராஜினாமா செய்ய அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துவிட்டார். டி.கே.ஆர். என அழைக்கப்படும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் முடிவு சஸ்பென்ஸாக இருக்கிறது.
குட்கா, பான்பராக் போன்ற போதை வஸ்துகளுக்கு தமிழ்நாட்டில் 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. எனினும் தடையை மீறி பல இடங்களில் அவை விற்கப்பட்டன. 2016-ம் ஆண்டு சென்னையை அடுத்த செங்குன்றத்தில் குட்கா குடோன்களின் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வருமான வரித்துறை சோதனையில் அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.
எனினும் தமிழ்நாடு அரசு அது தொடர்பாக நடவடிக்கை எதையும் எடுக்காததால், திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
குட்கா குடோன்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய டைரி, இந்த விவகாரத்தில் முக்கிய ஆதாரம் ஆனது. அதில் எந்தெந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு சட்டவிரோத குட்கா விற்பனைக்காக லஞ்சம் வழங்கப்பட்டது? என்கிற விவரங்கள் இருந்தன.
அதன் அடிப்படையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ் மற்றும் உணவுத்துறை, மத்திய கலால் துறை அதிகாரிகள் இதில் சிக்கினர். இவர்களது வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் நேற்று (செப்டம்பர் 5) சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டிஜிபி இல்லத்தில் சோதனை நடத்தியது, தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றது. அதேபோல ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண வினியோகப் புகாரின் பேரில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லத்தில் ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இப்போது குட்கா விவகாரத்திலும் அவரது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
குட்கா விவகாரத்தில் சிபிஐ சோதனையில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை திமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பியிருக்கின்றன. எனினும் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தப் பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். வருமான வரித்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியதைப் போல இன்று சிபிஐ சோதனைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கினேன்.
மடியில் கனம் இல்லாததால், எனக்கு வழியில் பயம் இல்லை. சுகாதாரத்துறையில் தமிழகம் சாதனைகளை படைத்து வருவதால், அரசியல் ரீதியாக என்னை பழிவாங்க இந்த விவகாரத்தை பயன்படுத்துகிறார்கள்’ என கூறியிருக்கிறார். ‘சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்’ என கூறியிருப்பதில் இருந்து, தார்மீக ரீதியாக ராஜினாமா செய்யும் திட்டம் இல்லை என்பதை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்திருக்கிறார்.
டிஜிபி டி.கே.ராஜேந்திரனைப் பொறுத்தவரை பணியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றவர் அவர்! தற்போது பதவி நீட்டிப்பில் இருக்கிறார். அடுத்தடுத்த சர்ச்சைகளால் அவர் ராஜினாமா முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
சிபிஐ சோதனையைத் தொடர்ந்து நேற்று இரவு சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு டி.கே.ஆர். வந்தார். அப்போது அரசு வாகனத்தை தவிர்த்துவிட்டு, தனது சொந்தக் காரில் வந்தார். அதுவே அவர் பதவி விலகத் தயாராகிவிட்டதை உணர்த்தியது.
டிஜிபி டி.கே.ஆர். வந்தபோது முதல்வர் தனது இல்லத்தில் இல்லை. எனவே சுமார் கால் மணி நேரம் அவர் அங்கே காத்திருந்தார். பிறகு முதல்வர் வந்ததும் இருவரும் அரை மணி நேரம் தனியாகப் பேசினர். அப்போது தனது பதவி விலகல் விருப்பத்தை டி.கே.ஆர். கூறியதாகத் தெரிகிறது.
ஆனால் இந்தத் தருணத்தில் பதவி விலகினால், குட்கா ஊழலை ஒப்புக்கொண்டது போலாகிவிடும் என முதல்வர் தரப்பில் யோசிப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதில் இன்றைக்குள் ஒரு முடிவு எட்டப்படும் என தெரிகிறது.
இதற்கிடையே முன்னாள் ஆணையர் ஜார்ஜ் இல்லம் உள்ளிட்ட சில இடங்களில் இன்றும் 2-வது நாளாக சிபிஐ சோதனை நடைபெற்றது. சோதனை முடிவில் முக்கிய ஆதாரங்கள் எதுவும் சிக்கியதா? என்பது தெரியவரும்.