"எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்" : ஹெச். ராஜா

நீதிமன்றம் குறித்த  கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக பி.ஜே.பி தேசிய செயலாளர் ஹெச். ராஜா உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக மனு தாக்கல் செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடைபெற்ற பிள்ளையார் சிலை நிகழ்ச்சியில், காவல் துறையுடன் வாக்குவாதம் செய்த ஹைச். ராஜா, சென்னை உயர் நீதிமன்றம் குறித்து தரக்குறைவாக பேசிய வீடியோ பதிவு சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

இச்சம்பவம் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய ஹெச். ராசாவுக்கு எதிராக, தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த மாதம் பதிவு செய்தனர்.

ஹெச். ராஜா மன்னிப்பு :

இதனையடுத்து வழக்கு தொடர்பாக அக்டோபர் 22 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் ஹெச். ராஜாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில், “பத்திரிகை செய்தி அடிப்படையில் வழக்குகளை தானாக முன்வந்து எடுக்கக்கூடாது என்றும், சக நீதிபதிகள் அவமானப்படுத்தப்பட்டாலும் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளே அது தொடர்பான வழக்கை விசாரிக்கட்டும்  என சில நீதிபதிகள் மறுத்துவிடுவார்கள் அல்லது காத்திருப்பார்கள்.

ஹெச். ராஜாவின் இந்த வீடியோ உலகம் முழுக்க பரவியது என்றாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்தது என்பதால் மதுரையில் கிளையில் பார்த்துக் கொள்ளட்டும் என சிலர் நினைக்கக்கூடும். காவல்துறை ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளதால், அந்த விசாரணை நல்ல முறையில் முடியும் என காத்திருப்பவர்களும் இருப்பார்கள். ஆனால் அரசும், காவல்துறையும் போகிற போக்கில் மறப்போம், மன்னிப்போம் என இந்த விசயத்தை மறந்து விடுவார்கள். ஆனால் நீதி பரிபாலனம் செய்வதில் நீதிபதிகள் தான் அச்சானி என்பதை உணர்ந்து, நீதித்துறையின் கண்ணியத்தை காப்பது நீதிபதிகளின் தலையாய கடமை ஆகும்.

எனவே கீழமை  நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை நீதிமன்ற மாண்பை காக்க வேண்டியதும் அனைவரின் கடமை. ஜனநாயகத்தின் தூணான நீதித்துறையை  களங்கப்படுத்த எடுக்கும்  முயற்சியை அனுமதிப்பது என்பது பாஸிசத்தையும், நக்ஸலிசத்தையும் வளர்ப்பதாகவே அமையும். அதனால் திருமயம் பகுதியில் ஹெச்.ராஜா பேசிய நீதிமன்றம் குறித்த பேச்சு தொடர்பாக தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கிறோம் என தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சி.டி. செல்வம், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற அவமதிப்பு உள்ளான பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தார். அப்போது அவர் சார்பில் இந்த வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் திருமயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீதிமன்றம் குறித்து கருத்து எந்தவிதமான உள்நோக்கமும் தமக்கு இல்லை எனவும் அங்கு நடைபெற்ற நிகழ்வின்  காரணமாக வாய் தவறி கோபத்திலும், உணர்ச்சி வசப்படும் அந்த வார்த்தைகள்  தெரிவித்ததாகவும் அதற்காக நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவித்திருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஹெச். ராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close