விஜய் ரசிகர்களே… மன்றங்களை கலையுங்கள்! என நடிகர் விஜய்-யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசிய வீடியோவை வெளியிட்டு ஹெச்.ராஜா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
நடிகர் விஜய் நடித்து அண்மையில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்து தவறான தகவல் இடம் பெற்றது. டிஜிட்டல் இந்தியா குறித்த விமர்சனங்களும் இருந்தன. தவிர, கோவில்களை அகற்றி பள்ளிக்கூடங்களாக மாற்ற வேண்டும் என்கிற வசனத்தையும் இந்துத்வா அமைப்புகள் கண்டித்தன.
பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் விஜய்-யின் மெர்சலுக்கு எதிராக குரல் கொடுத்தனர். இது அரசியல் ரீதியாக சர்ச்சை ஆனது. விஜய்-யின் பெயரை, ‘ஜோசப் விஜய்’ என ஹெச்.ராஜா குறிப்பிட்டார். அதற்கான ஆவணங்களையும் அவர் வெளியிட்டார். பிறகு மெர்சல் வெற்றிக்கு நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்ட லெட்டர் பேடில் அவராகவே, ‘ஜோசப் விஜய்’ என குறிப்பிட்டு ‘பஞ்ச்’ வைத்தார்.
ஹெச்.ராஜா வெளியிட்ட ட்வீட்..
நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இன்று தனக்கு ஜாதி இல்லை மதம் இல்லை நாங்கள் தமிழர்கள் மனிதர்கள் என்கிற கிறித்தவ மதமாற்றும் சக்திகளின் கோரமுகம் இதோ. நாம் ஏழுமலையானுக்கு செலுத்தும் காணிக்கை லஞ்சமாம். இந்துக்களே இனியும் நாம் ஏமாறப் போகிறோமா?ரசிகர் மன்றம் கலைப்போம் இந்துவாக இணைவோம் pic.twitter.com/7p70TKb0eE
— H Raja (@HRajaBJP) November 25, 2017
பாரதிய ஜனதாவுக்கும், விஜய்-க்கும் இடையிலான அந்த விவகாரம் ஓய்ந்திருக்கும் நிலையில், அடுத்த விவகாரத்தை கிளப்பியிருக்கிறார் ஹெச்.ராஜா. நடிகர் விஜய்-யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியதாக ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஹெச்.ராஜா, பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்.
‘நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இன்று தனக்கு ஜாதி இல்லை, மதம் இல்லை, நாங்கள் தமிழர்கள், மனிதர்கள் என்கிற கிறித்தவ மதமாற்றும் சக்திகளின் கோரமுகம் இதோ. நாம் ஏழுமலையானுக்கு செலுத்தும் காணிக்கை லஞ்சமாம். இந்துக்களே இனியும் நாம் ஏமாறப் போகிறோமா?ரசிகர் மன்றம் கலைப்போம். இந்துவாக இணைவோம்’ என குறிப்பிட்டிருக்கிறார் ஹெச்.ராஜா.
வழக்கம்போல இந்தப் பதிவு தொடர்பாக விஜய் ரசிகர்களுக்கும் பாஜக.வினருக்கும் இடையே சமூக வலைதளங்களில் ‘போர்’ நடக்கிறது.