தமிழக பா.ஜ., தலைவராக ஹெச். ராஜா அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதுபோல, அந்த கட்சியின் மூத்த நிர்வாகி எஸ்.வி.சேகர் வெளியிட்ட டுவீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை, அதாவது நான்கரை மாதங்களாக, தலைவர் பதவியைக் காலியாக உள்ளது.
அவர் வருவாரா, இவர் வருவாரா என்றெல்லாம் பல்வேறு யூகங்கள் ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே உள்ளதே தவிர, பா.ஜ.,மேலிடம், இதுவரை யாரையுமே இந்த பதவிக்கு நியமிக்கவில்லை. இந்த நிலையில், தை மாதத்தில் கண்டிப்பாக தமிழக பாஜகவுக்கு தலைவர் நியமிக்கப்படுவார், என்று தீவிரமாக செய்திகள் பரவி வருகின்றன.
தமிழக பா.ஜ., தலைவர் பதவிக்கு ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், எஸ்வி சேகர் போன்ற பல்வேறு மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் கணக்கில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். அதில், ராஜாவுக்கு சால்வை அணிவித்து, தான் பக்கத்தில் நிற்க கூடிய புகைப்படத்தை அவர் ஷேர் செய்துள்ளார். மேலும், போட்டோஷாப் மூலமாக ராஜா தலையில் கிரீடம் வைக்கப்பட்டு உள்ளது. வாழ்த்துக்கள் என்றும் எழுதியுள்ளார் எஸ்.வி.சேகர்.
சேகரின் இந்த டுவிட்டிற்கு பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.