திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு எதிராக அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்தி முகந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜா, ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மற்றும் அவரது மகள் திமுக எம்பி கனிமொழி பற்றி அவதூறு கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
இது சம்பந்தமாக தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் நலச் சங்கத்தின் தலைவர் குகேஷ், சென்னை நொளம்பூர் காவல்நிலையத்தில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி புகார் அளித்தார். அந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், புகார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி குகேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பிறப்பித்த உத்தரவில், காவல்துறை புகாரை விசாரித்து, குற்றசாட்டுகள் மீது முகாந்திரம் இருந்தால் வழக்குபதிவு செய்வது உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அல்லது குற்றச்சாட்டுக்கு முகந்திரம் இல்லை என்றால் புகார் மனுவை முடித்து வைக்க வேண்டும் என நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.