ஹெச்.ராஜா நீதிமன்றத்தை அவமதித்த விவகாரத்தில் 4 வாரங்களில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
ஹெச்.ராஜா, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யப்பபுரத்தில் விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்டபோது போலீஸாருடன் மோதல் ஏற்பட்டது. அப்போது நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் ஹெச்.ராஜா பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பெரும் தாக்கத்தை உருவாக்கியது.
ஹெச்.ராஜா மீது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் போலீஸார் 8 பிரிவுகளில் ஹெச்.ராஜா மீது நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.
ஹெச்.ராஜா மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் சி.ராஜசேகர் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் அமர்வில் முறையிட்டார். அந்த முறையீடு ஏற்கப்படவில்லை.
இதற்கிடையே நீதிபதி சி.டி.செல்வம் அமர்வு, தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரிப்பதாக அறிவித்தது. ஹெச்.ராஜா இது தொடர்பாக 4 வாரங்களில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
4 வாரங்களில் ஏதாவது ஒரு நாளில் ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.