மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள த.வெ.க தலைவர் விஜய்யை விமர்சித்து பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், விஜய் தனது மகனை மும்மொழி கல்வி போதிக்கும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துவிட்டு அவருடைய ரசிகர்கள் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் தமிழக குழந்தைகள் அனைவருக்கும் அதே தரத்திலான மும்மொழி கல்வியை மத்திய அரசு வழங்குவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக இருக்கிறது என்று ஹெச். ராஜா பதிவிட்டுள்ளார்.
புதிய கல்விக் கொள்கை மூலம் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இந்தி மொழியை பாடமாக்க வேண்டும் என்று மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. தமிழக அரசு மும்மொழிக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் பா.ஜ.க-வைத் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகவே இருக்கின்றன.
அதே நேரத்தில், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையொப்பம் இட்டால் தான் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு கூறி வருகிறது. இதனால், 40 லட்சம் மாணவர்களின் கல்வி கேள்விக்கு உள்ளாகியுள்ளது என்று தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். அ.தி.மு.க, த.வெ.க உள்ளிட்ட எதிர் கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய்யை விமர்சித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் வேட்டைக்காரன் என்கிற ஒரு திரைப்படத்தின் முதல் பாடலில் தனது மகன் ஜேஸன் சஞ்சய் உடன் நடனமாடி இருப்பார்.
அந்த பாடலில் பள்ளிச் சிறுவர்கள் கூட்டத்தின் மத்தியில் நின்று ... “ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும் நீ தாய்மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும்” என்று பாடுவார்.
தன் மகன் ஜேஸன் சஞ்சயை தமிழ்வழி சமச்சீர் பள்ளியில் சேர்க்காமல் மும்மொழி கல்வி போதிக்கும் சென்னை "அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூலில்" சேர்த்து படிக்க வைத்திருக்கிறார்.
அவர் விருப்பபடி அரசு பள்ளிகள் எல்லாம் ஆக்ஸ்போர்ட் போல அவருடைய மகன் ஜேஸன் சஞ்சய் பயின்ற அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல் போல கல்வித் தரத்தில் உயர வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு தான் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
அதை புரிந்து கொள்ளாமல் அவர் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது ஏன் என தெரியவில்லை.
அவர் மகனை மும்மொழி கல்வி போதிக்கும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துவிட்டு அவருடைய ரசிகர்கள் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் தமிழக குழந்தைகள் அனைவருக்கும் அதே தரத்திலான மும்மொழி கல்வியை மத்திய அரசு வழங்குவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக இருக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.