ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை மதிமுக ஆதரிக்கும் என்ற முடிவு குறித்து, ‘புத்திசாலிகள் அடுத்தவர் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள்’ என்று ட்விட்டரில் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். அவர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கிறாரா? அல்லது வைகோவை விமர்சிக்கிறாரா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, பிஜேபி ஆகிய அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. சுயேட்சையாக டிடிவி.தினகரன், நடிகர் விஷால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுக வேட்பாளருக்கு விடுதலை சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம் உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், மதிமுகவின் உயர் மட்ட அரசியல் ஆலோசனை குழு கூட்டம் தாயகத்தில் நடந்தது. கூட்டம் முடிந்ததும், திமுக வேட்பாளரை ஆதரிப்பதாக வைகோ பேட்டியில் தெரிவித்தார். 13 ஆண்டுகளுக்குப் பின்னர் வைகோ, திமுகவை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, அவர் திமுக கூட்டணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையுடன் மூன்றாவது அணிக்குச் சென்றுவிட்டார். அந்த அணிக்கு வைகோ-விஜயகாந்த் இருவரும் தலைமை தாங்கினார்கள். தேர்தலில் வெற்றி பெற்றால் விஜயகாந்த் முதல்வர் என்று அறிவித்து தேர்தலை சந்தித்தனர். ஆனால், ஒரு இடத்தில் கூட அந்த கூட்டணி வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில் அந்த அணி திமுகவின் வெற்றி வாய்ப்பை தடுத்து நிறுத்தியது.
இதையடுத்து மு.க.ஸ்டாலின், வைகோவின் முடிவை வரவேற்றிருந்தார். இது குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டரில் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
அதில், புத்திசாலிகள் அடுத்தவர் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள். ஆனால், முட்டாள்கள் தங்களுடைய சொத்த அனுபவத்தில் இருந்து கூட பாடம் கற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கமெண்ட் செய்திருந்தார். இது வெறும் பழமொழி மட்டுமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், டிவி ஒன்றில் வந்த, ‘மதிமுக முடிவுக்கு ஸ்டாலின் வரவேற்பு’ என்ற செய்தியை ரிட்விட் செய்து மேலே சொன்ன கமெண்டை பதிவு செய்கிறார். அவர் ஸ்டாலினை சொல்கிறாரா? அல்லது வைகோவை சொல்கிறாரா? என்ற கேள்வி அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.