ஹெச்.ராஜாவை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அட்டர்னி ஜெனரல் அழைத்தது சரியா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசியதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சர்ச்சையில் சிக்கினார். இந்த விவகாரத்தில் அவரது விளக்கத்தை கேட்காமலேயே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிடக் கோரி
தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் அளிக்க கோரி அரசு தலைமை வழக்கறிஞரிடம் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் அக்டோபர் 3 ஆம் தேதியன்று ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுள்ளது. ராஜாவின் கருத்தை கேட்காமலேயே அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்து ஒப்புதல் அளிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து மட்டுமே அரசு தலைமை வழக்கறிஞர் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளானவரை அழைத்து விளக்கம் கேட்க வேண்டிய அதிகாரம் அவருக்கு கிடையாது’ என நீதிபதி மகாதேவன் தெளிவுபடுத்தினார்.
அரசு தரப்பில் மனு குறித்து பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து மனு தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 7ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.