சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள ஆழிமதுரை கிராமத்தில் நேற்று பள்ளிக்குச் சென்ற சிறுமிகள் சோபிதா, கிஷ்மிதா இயற்கை உபாதை கழிக்க சென்றபோது கண்மாயில் மூழ்கி பலியாகினர். இதனை தொடர்ந்து, இளையான்குடி அரசு மருத்துவமனையில் அச்சிறுமிகளின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. இறந்து போன சிறுமிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஆழிமதுரை அரசு துவக்கப் பள்ளியில் கழிப்பறை வசதி இருந்தும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவிகளை அங்கு செல்ல விடாமல் அவர்களை தடுப்பதாக ஏற்கனவே புகார்கள் வந்துள்ளன.
மேலும், ஆசிரியர்களே மாணவிகளிடம் கப்பை கொடுத்து கண்மாய்க்கு செல்லும்படி கூறியுள்ளனர். இதனால், நேற்று இரண்டு சிறுமிகள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இதேபோன்று 4-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பலியான சம்பவங்கள் சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வருகின்றனன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பொய்யவயல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவர் பலியாகி உள்ளார். தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு நிவாரணமாக ரூபாய் 10 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பள்ளிக்கு வந்த சிறுமிகள் உயிரிழப்பிற்கு நிவாரணமாக ரூபாய் 3 லட்சம் வழங்குவது போதாது. நிவாரணத் தொகையாக ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும். மேலும், அவர்களது பெற்றோர்களுக்கு படிப்பிற்கு தகுந்தாற்போல் அரசு வேலை வழங்க வேண்டும். இச்சம்பவத்திற்கு காரணமான ஆசிரியர்கள் மீது கண்துடைப்பாக சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஆகவே, அவர்கள் மீது நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹெச்.ராஜா தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்தார்.