சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பா.ஜ.க-வின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
"இந்த அரசில் இதுவரை காவல் விசாரணைகளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நிகழ்ந்த அஜித்தின் மரணத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்" என்று கூறினார்.
மேலும், சாத்தான்குளம் காவல் நிலைய மரணத்தின்போது தி.மு.க எம்.பி. கனிமொழி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய ஹெச். ராஜா, திருப்புவனம் சம்பவத்திற்கு ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
"காவல்துறை கொலைத்துறையாக மாறிவிட்டது" என்று கடுமையாக விமர்சித்த ஹெச். ராஜா, இந்த மரணத்தின் உண்மை வெளிவர சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.