டெல்லியில் இருந்து காரைக்குடி செல்வதற்காக பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். இதைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதன்படி, "தலைநகர் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க அதிக பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சியினுடைய ஊழல் அரசாங்கத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் சூழல் உள்ளது.
தமிழகத்தில் இந்து விரோத அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்து கோயிலை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிற ஆட்சி இது. சனாதன ஹிந்து தர்மத்தை மலேரியா கொசு மாதிரி அடிக்க வேண்டும் என்று சொன்ன தீய நபருக்கு மகுடம் சூட்டுவதற்காக பழனியில் முருகனுக்கு மாநாடு நடந்தது என்று தெளிவாகத் தெரிகிறது.
சிக்கந்தர் என்பவர் எப்படி மலையில் இருந்தார்? எதற்கு மலைக்கு வந்தார்? தர்கா வருவதற்கு முன்பாக அங்கு இருந்தது யார்? காசி விஸ்வநாதர் கோயில் தானே இருந்தது. சிக்கந்தருக்கு அங்கு என்ன வேலை? காசி விஸ்வநாதர் கோயிலை இடிப்பதற்காகத்தான் சிக்கந்தர் போனார் என்கிற கருத்து மக்களிடையே உள்ளது.
மத நல்லிணக்கம் விரும்புபவர்கள், இந்து - முஸ்லிம் இடையே இணக்கமாக வாழ வேண்டும் என நினைப்பவர்கள் தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம். அயோத்தியும் இதே போல் தான் ஆராய்ச்சி அடிப்படையில் கொடுக்கப்பட்டது.
இங்கு இருக்கக் கூடிய செயின்ட் தாமஸ் சர்ச் தான் கபாலி கோயில். இதையெல்லாம் திருமாவளவன் பெருமையாக சொல்கிறார். இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை நீங்கள் ஆண்டாண்டு காலமாக அபகரிப்பீர்கள். சிங்கம் ஆட்டுக்குட்டியை சாப்பிட்டால், சிங்கத்துடன் ஆடு ஐக்கியம் ஆகிவிட்டதாக சொல்வதைப் போல, அழித்துவிட்டால் ஒன்றாகி விடுவோம் என்று சொல்வது சரியாக இருக்காது.
தமிழக அரசு இந்து விரோதக் கொள்கையை கைவிட வேண்டும். ஈ.வே.ரா-வின் பெயரை சொல்பவர்கள் தமிழை விரும்புபவர்களாக இருக்க முடியாது. தமிழை சனியன், காட்டுமிராண்டி கூட்டம் என்று சொன்ன ஈ.வே.ரா-வின் கூட்டம் தமிழ் பற்றாளர்களாக இருக்க முடியாது.
நாளை இந்துத்துவாவின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தர வேண்டும். இந்துக்களை துன்புறுத்துவது தான் இந்த அரசின் வேலை. உதயநிதி ஸ்டாலின் தான் கிறிஸ்தவன், அதில் பெருமைப்படுகிறேன் என்று சொல்கிறார். சேகர் பாபு அல்லேலூயா என்றார். அதற்குத்தான் அவருக்கு அல்லேலூயா பாபு என பெயர் வைத்தேன். அயோத்தி பிரச்சனைக்கு பிறகு இந்து எழுச்சியால் உத்தர பிரதேசத்தில் யாரும் அதிகாரத்திற்கு வர முடியவில்லை. அந்த எழுச்சி இங்கும் வரும்" எனத் தெரிவித்தார்.