Tamil Nadu Tamil News: சென்னை குயப்பேட்டை கந்தசாமி மற்றும் ஆதி மொட்டையம்மன் கோயில்கள் அருகே உள்ள பழைய மீன் சந்தை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதிய மீன் சந்தை கட்டப்படும் என தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக ரூ.1.55 கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த மீன் சந்தையைக் கட்டத் தேவையான நிதியை திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் மற்றும் வைகுண்ட பெருமாள் கோயில் போன்ற திருக்கோயில்களிலிருந்து கடனாகப் பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்து அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் நிர்வாக அனுமதியை வழங்கியுள்ளார்.
இந்த தகவல்கள் அனைத்தும் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், தமிழக அரசின் இந்த முடிவை பாஜகவினர் கடும் விமர்சனம் செய்தனர். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்த பா.ஜ.க-வின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, "இந்து கோவில்களின் நிதியை சட்டவிரோதமாக எடுத்து மீன்மார்க்கெட் கட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது." என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களையும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து இருந்தார்.
இந்து கோவில்களின் நிதியை சட்டவிரோதமாக எடுத்து மீன்மார்க்கெட் கட்டுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது. pic.twitter.com/iK2vpPZ1Eg
— H Raja (@HRajaBJP) December 28, 2021
ஹெச். ராஜா எதிர்ப்பு
இந்நிலையில், நேற்று சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எச்.ராஜா, சென்னை குயப்பேட்டை கந்தசாமி ஆதி மொட்டையம்மன் கோயில் இடத்தில் மீன்மார்க்கெட் கட்டுவதற்காக கோயில்களின் நிதி ரூ.1.55 கோடியை எடுத்தது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்து மீண்டும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
"ஜனவரி 3ம் தேதி சிவகங்கையில் நடக்கும் வேலுநாச்சியார் பிறந்த நாள் விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்கிறார். திருச்செந்துார் கோயிலில் பெண் பக்தரை தாக்கிய அறநிலையத்துறை உதவி கமிஷனரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
சென்னை குயப்பேட்டை கந்தசாமி ஆதி மொட்டையம்மன் கோயில் இடத்தில் மீன் மார்க்கெட் கட்டுவதற்காக, திருத்தணி சுப்பிரமணியசுவாமி, திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி, வைகுண்ட பெருமாள் கோயில்களின் நிதி ரூ.1.55 கோடியை எடுத்தது கண்டிக்கத்தக்கது. கோயில்களில் உபரி நிதி இருந்தால் அதை கட்டாயம் வருமானம் இல்லாத கோயில்களுக்கு தான் பயன்படுத்த வேண்டும்.
பதவிக்காக ஜெயலலிதா காலில் விழுந்த சேகர்பாபு தான் தற்போது அறநிலையத்துறை அமைச்சராக உள்ளார். ஹிந்து கோயில்கள் விஷயத்தில் அமைச்சர் சேகர்பாபு எல்லை மீறக்கூடாது. காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தான் 650 மீனவர்கள் கொல்லப்பட்டனர். நுாற்றுக்கணக்கான படகுகள் சேதமாகின. பா.ஜ.க ஆட்சியில் மீனவர்கள் பாதுகாப்புடன் உள்ளனர்" என்று பா.ஜ.கவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.