பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா திருச்சி மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வழக்கமாக அரசியல்வாதிகள் வீடுகளில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை முதன்முறையாக அரசு துறை அலுவலகத்தில் நடந்துள்ளது. இதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். அமலாக்கத்துறை அதன் முதல் கட்ட அறிக்கையை கொடுத்துள்ளதில் மூன்று வகையான முறையில் ஊழல், முறைகேடு நடந்ததாக அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
கூடுதல் விலையில் மது விற்பனை, டாஸ்மாக் பணியாளர் நியமனம் பணியிட மாற்றம் உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு செய்தது தெரிய வந்ததன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.
100 சதவீதம் ஊழல் நடந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்தது உறுதியாகி உள்ளது. இரண்டு லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, இதனை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. டெல்லி, சட்டீஸ்கர், தெலுங்கானாவை விட தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் பலமடங்கு கூடுதலாக இருக்கும். இதை உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டெல்லியில் முதல்வர் இந்த ஊழலில் தொடர்பிருப்பது போன்று, இங்கு தொடர்ப்பு இருக்குமோ? என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆதாரம் இருப்பதால் தான் அமலாகத்துறை சோதனை நடத்தி உள்ளது. இந்த டாஸ்மாக் ஊழலை பொதுமக்களிடம் எடுத்து செல்லும் வழியில் நாளை மறுதினம் (17ந் தேதி)சென்னையில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து பா.ஜ.க சார்பில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் கடைகள் முன்பு போராட்டம் நடைபெற உள்ளது.
பா.ஜ.க டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி போராடி வருகிறது. தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர் எனக் கூறிய கனிமொழி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தில் டாஸ்மாக்கை ஒழிப்போம் என்றார். தி.மு.க எதெல்லாம் நடக்காதோ அதற்கெல்லாம் முதல் கையெழுத்து எனக் கூறுவர். டாஸ்மாக்கில் கொள்ளை அடித்த பணம் இருக்கும் திமிரில் தான் தி.மு.க-வினர் 200 இடங்களில் ஜெயிப்போம் எனக் கூறி வருகின்றனர்.
திருச்சி உக்கிரகாளியம்மன் கோவில் இடத்தில் கோவில் திருவிழாவிற்காக பேனர் வைத்ததற்காக பா.ஜ.க மாநகர பொதுச்செயலாளர் உள்பட ஆறு பேர் சிறைவைக்கப்பட்டுள்ளனர் இது காவல்துறையின் அராஜகத்தை காட்டுகிறது. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். திமுக தலைமைக்கு தெரியாமல் இந்த ஊழல் நடைபெற்று இருக்க வாய்ப்பு இல்லை, தமிழகத்தின் சிசோடியா யார் என்பது தெரிந்துவிடும்.
மத்திய அரசுக்கு வரி செலுத்த மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் கூற தைரியம் உள்ளதா? பா.ஜ.க ஆட்சியில் ரூ12000 செலவில் கழிப்பறை கட்டப்பட்டது. ஆனால் சென்னை கார்ப்பரேஷன் ஒரு கழிப்பறை கட்ட 1 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. தி.மு.க ஆட்சியை தூக்கி எறியாமல் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. இந்த ஊழல்கள் அனைத்தும் தி.மு.க தலைமைக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது என் யூகம். கடந்த 2006 ஆம் ஆண்டில் தமிழகத்தின் கடன் தொகை ரூ.26,000 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது அது ரூ.9.26 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த பட்ஜெட் தமிழகத்தை அனைவரும் திரும்பிப் பார்க்கும்படி உள்ளது என தங்கம் தென்னரசு கூறியுள்ளார். கொஞ்சம் குஜராத்தை பாருங்கள். அங்கே உள்ள நிதி அமைச்சர் மற்றும் முதல் அமைச்சரிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால், அவர்கள் டாஸ்மாக் வருமானம் இல்லாமல் 19 ஆயிரம் கோடி கையிருப்புடன் உபரி பட்ஜெட் போட்டுள்ளனர்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வித்துறையில் அரசியல் செய்கிறார். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 60 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 15 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. ஆனாலும் தனியார் பள்ளி கல்வி தரம் அரசு பள்ளிகளை விட நன்றாக உள்ளது. சேலத்தில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பதிவிட்டதால் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசின் பட்ஜெட் , தி.மு.க-வின் 2026 தேர்தல் அறிக்கை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.