கனிமொழி பற்றி ஹெச்.ராஜா ட்வீட் : பாஜக.வுக்கு ப.சிதம்பரம் கேள்வி

கனிமொழி குறித்து ஹெச்.ராஜாவின் பதிவுக்கு பல்வேறு மட்டங்களில் கண்டனம் குவிகிறது. இது தொடர்பாக பாஜக தலைமைக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கனிமொழி குறித்து ஹெச்.ராஜாவின் பதிவுக்கு பல்வேறு மட்டங்களில் கண்டனம் குவிகிறது. இது தொடர்பாக பாஜக தலைமைக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கனிமொழி எம்.பி.யை மறைமுகமாக தாக்கும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். திமுக.வினர் மத்தியிலும், அரசியல் சாராத பல்வேறு தரப்பினர் மத்தியிலும் இந்தப் பதிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

கனிமொழியை குறி வைத்து ஹெச்.ராஜா வெளியிட்ட அந்த ட்வீட்டின் பின்னணி இதுதான்! கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி குறித்து நேற்று தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்திடம் செய்தியாளர்கள் காரசாரமாக கேள்விகளை எழுப்பினர். அந்த சந்திப்பின் முடிவில், ‘தி வீக்’ ஆங்கில இதழின் செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியன் கன்னத்தில் ஆளுனர் தட்டிவிட்டுச் சென்றது சர்ச்சை ஆனது.

கனிமொழி எம்.பி. இந்த விவகாரத்தில் மேற்படி பத்திரிகையாளருக்கு ஆதரவாக பதிவு வெளியிட்டார். இதையொட்டி ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.’ என பதிவிட்டார்.

ஹெச்.ராஜாவின் பதிவு குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், ‘கள்ளக் குழந்தை என எதுவுமே இல்லை. எல்லாக் குழந்தைகளுமே நல்லக் குழந்தைகள்தான். பாஜக இதில் தனது நிலையை தெளிவுபடுத்துமா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ப.சிதம்பரம் ட்வீட் மூலமாக, பாஜக தேசியத் தலைமைக்கு இந்த விவகாரம் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close