ஹெச்.ராஜாவின் விமர்சனத்திற்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ‘கனிமொழி மீதான விமர்சனம் வேதனையை தருகிறது’ என்றார் அவர்!
ஹெச்.ராஜாவின் சர்ச்சை ட்வீட்கள், புதிதல்ல! லேட்டஸ்டாக, கனிமொழி எம்.பி.யை மறைமுகமாக தாக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். திமுக.வினர் மத்தியிலும், அரசியல் சாராத பல்வேறு தரப்பினர் மத்தியிலும் இந்தப் பதிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
கனிமொழியை குறி வைத்து ஹெச்.ராஜா வெளியிட்ட அந்த ட்வீட்டின் பின்னணி இதுதான்! கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி குறித்து நேற்று தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்திடம் செய்தியாளர்கள் காரசாரமாக கேள்விகளை எழுப்பினர். அந்த சந்திப்பின் முடிவில், ‘தி வீக்’ ஆங்கில இதழின் செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியன் கன்னத்தில் ஆளுனர் தட்டிவிட்டுச் சென்றது சர்ச்சை ஆனது.
கனிமொழி எம்.பி. இந்த விவகாரத்தில் மேற்படி பத்திரிகையாளருக்கு ஆதரவாக பதிவு வெளியிட்டார். இதையொட்டி ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.’ என பதிவிட்டார். இதே ஆபாச பாணியில் திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி ஒரு பதிலடி பதிவை வெளியிட்டார்.
ஹெச்.ராஜாவின் பதிவு ஒரு பெண் என்ற முறையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கியது. ட்விட்டரில் பலரும் இதில் தமிழிசையின் கருத்தை கேட்டு நச்சரித்தனர். இந்தச் சூழலில் இன்று மாலை 5.30 மணியளவில் தமிழிசை தனது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்தார்.
ஹெச்.ராஜா, கனிமொழி ஆகியோரின் பெயர்களை வெளியிடாமல், நாசூக்காக ஹெச்.ராஜாவுக்கு எதிர்ப்பையும், கனிமொழிக்கு ஆறுதலையும் அந்தப் பதிவில் கூறியிருக்கிறார் தமிழிசை. அவரது பதிவில், ‘பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக்கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத்தருகிறது.’ என கூறப்பட்டிருக்கிறது.