புதுச்சேரியில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதையடுத்து நாளை (மார்ச் 16) முதல் 26-ம் தேதி வரை 1 முதல் முதல் 8 வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதாக கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று (மார்ச் 15) சட்டப்பேரவையில் அறிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து 13-ம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். இம்மாதம் 31-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் மற்றும் இதர துறை தலைவர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் உள்துறை மற்றும் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், “நாடு முழுவதும் H1N1 வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரியிலும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கல்வித்துறை சார்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு உதவி்பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வருகிற 16-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுவதாக பேரவையில் கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/