நாடு முழுவதும் தற்போது இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது வரை 90 பேருக்கு H3N2 வகை இன்புளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், சளி முக்கிய அறிகுறிகளாக உள்ளது. இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மத்திய, மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் 1000 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதன்படி இன்று காய்ச்சல் முகாம்கள் தொடக்கப்பட்டுள்ளது. கோவையில் 125 இடங்களில் காய்ச்சல் முகாம் தொடக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட சுகாதாரத் துறையின் சார்பில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின் பேரில் 41 இடங்களில் காய்ச்சல் முகாம் நடைபெறுகிறது.
அதேபோல புறநகர் பகுதிகளில் மாவட்ட சுகாதாரத் துறையின் சார்பில் 84 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக கோவை மாவட்டம் முழுவதும் 125 இடங்களில் காய்ச்சல் முகாம் தொடக்கப்பட்டுள்ளது.
முகாம்களுக்கு வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா? என்பதை மருத்துவ குழுவினர் உறுதி செய்கின்றனர். காய்ச்சல் இருப்பவர்களுக்கு தேவையான மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
செய்தி: பி.ரஹ்மான், கோவை