உச்ச நீதிமன்றத்தில் சுதந்திரம் வேண்டும் எனக்கேட்ட நிலையில் இதுபோன்ற விடுதலையை எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ள மாணவி ஹதியா, இதுவும் மற்றொரு சிறைபோல் இருக்குமோ எனத் தோன்றுகிறது என்று வேதனை தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த இந்து மதத்தை சார்ந்த அகிலா என்பவர், முஸ்லிம் மதத்திற்கு மாறி ஷஃபீன் ஜஹான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, தன் மகள் கட்டாயப்படுத்தப்பட்டு மதம் மாற்றப்பட்டிருக்கிறார் எனக்கூறி, அவரது திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என ஹதியாவின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், தன் மகள் மதவாத குழுக்களால் முஸ்லிம் மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தப்பட்டார் என கூறியிருந்தனர். இந்த வழக்கில், ஹதியாவின் திருமணத்தை ரத்து செய்து, அவர் தன் பெற்றோர் உடன் செல்ல வேண்டும் என உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஹதியாவின் கணவர் ஷஃபீன் ஜஹான், மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரினார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் ஹதியாவை நவம்பர் 21-ஆம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஆஜரான ஹதியா, "எனக்கு சுதந்திரம் வேண்டும். நான் என்னுடைய நம்பிக்கைக்கு உண்மையாக இருக்க வேண்டும்.”, என கூறினார். மேலும், தன் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் ஹதியா தெரிவித்தார்.
இதையடுத்து, சேலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி ஹதியா தனது படிப்பை தொடர வேண்டும். அவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், கல்லூரி முதல்வர் நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும். கூடிய விரைவிலேயே அவர் கல்லூரிக்கு செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இத்தகைய திருமணங்கள் குறித்து என்.ஐ.ஏ. அமைப்பு மேற்கொண்டு வரும் விசாரணை தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சேலம் வந்த மாணவி ஹதியா, சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "உச்ச நீதிமன்ற உத்தரவு இதுவரை கல்லூரிக்கு கிடைக்காததால் நிர்வாக நடவடிக்கை பற்றி தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் சுதந்திரம் வேண்டும் எனக்கேட்ட நிலையில், இதுபோன்ற விடுதலையை எதிர்பார்க்கவில்லை. இதுவும் மற்றொரு சிறைபோல் இருக்குமோ எனத் தோன்றுகிறது. நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் கூறுவது தவறு. எனது கணவரை சந்திக்க வேண்டும் என்பதே தற்போதைய ஆசை. எனது கணவரை இன்னும் என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. உச்ச நீதிமன்றம் அனுமதி தரும் என நம்புகிறேன்.
ஒவ்வொரு குடிமகனும் அனுபவிக்கும் அடிப்படை உரிமையைத் தான் கேட்கிறேன். இங்கு, அரசியலுக்கோ, ஜாதிகளுக்கோ இடமில்லை. நான் யாரை விரும்புகிறேனோ அவரை சந்திக்கவே விரும்புகிறேன்" என்றார்.
ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி தாளாளர் தெரிவிக்கையில், கல்லூரியில் பிற மாணவிகளைப்போலவே ஹதியாவும் நடத்தப்படுவார். ஹதியாவை சந்திக்க விரும்பும் உறவினர்கள் கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற வேண்டும்" என்று கூறினார்.
முன்னதாக, கல்லூரி முதல்வர் கண்ணன் கூறுகையில், "அவளுடைய கணவர் யார் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. எங்களுக்கு அவர் இப்போதும் அகிலா தான். இந்தச் சூழ்நிலையில், அவளது பெற்றோரைத் தவிர வேறு யாரும் அவளை சந்திக்க அனுமதிக்க மாட்டேன்" என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.