புதுச்சேரியையும் கடலூரையும் இணைக்கும் தென்பெண்ணை ஆற்றில் மீனவர்கள் வலையில் கை துப்பாக்கி கிடைத்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தையும் கடலூர் மாவட்டத்தையும் இணைக்கக்கூடிய தென்பெண்ணை ஆற்றின் ஓரத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாய்ந்து செல்லும் தென்பெண்ணை ஆற்றில் மீனவர்கள் வழக்கம் போல் இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதையும் படியுங்கள்: வட மாநிலத்தவர் பணி நியமன சர்ச்சை; என்.எல்.சி விளக்கம்
இந்நிலையில் மீன்பிடித்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் தங்களது வலையை சரிபார்த்த பொழுது அதில் துப்பாக்கி ஒன்று கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற ரெட்டி சாவடி போலீசார் மீனவர்கள் வளையல் சிக்கிய துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மேலும் இது தொடர்பாக ரெட்டி சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி ஆய்வுக்காக மாவட்ட காவல்துறை இடம் ஒப்படைக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியின் ரகம், எதற்காக இது பயன்படுத்தப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையிடம் விசாரித்த பொழுது சம்பந்தப்பட்ட துப்பாக்கி நாட்டு ரகமாகவும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதில் தோட்டா வைத்து பயன்படுத்தும் நிலை இருக்கிறது. இதன் எடை 700 கிராம் இருந்தது. எனவே இதனை பறிமுதல் செய்யப்பட்ட பெண்ணை ஆற்றின் எல்லை பகுதியாக உள்ள புதுச்சேரி பகுதியில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்காக கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றனர். ஆற்றில் துப்பாக்கி கிடந்த சம்பவம் பல்வேறு வகையில் சந்தேகத்தை கிளப்பி உள்ளதால் பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil