Advertisment

சுதந்திர நாள்: ஜனநாயகம் - தேச ஒற்றுமை - மதநல்லிணக்கம் கட்டிக் காப்போம் - தலைவர்கள் வாழ்த்து

சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
leaders wishes

சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் 78வது சுதந்திர தினம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றுகிறார். அதே போல, தமிழகத்தில் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

Advertisment

இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், “78-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடுகிற நேரத்தில் மதவெறி சக்திகளை மாய்த்திடவும், மாநில உரிமைகள் பறிப்பதை முறியடிக்கவும், ஜனநாயகத்தையும், தேச ஒற்றுமையையும், மதநல்லிணக்கத்தையும் கட்டிக் காத்திடவும் சுதந்திர திருநாளில் சூளுரையோற்போம். இந்தியாவில் வகுப்புவாத சக்திகள் தலை தூக்காமல் முறியடிக்கிற பணியை மிகச் சிறப்பாக செய்கிற வகையில் பரப்புரை மேற்கொண்டு இந்திய இறையாண்மையை பாதுகாப்போம்.

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், “ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி, பல தியாகங்களை செய்து விடுதலை பெற்ற நாம், இப்போது மக்களுக்கு சமூகநீதி வழங்கப்படுவதையும், அச்சமில்லா நல்லாட்சி கிடைப்பதையும் சாத்தியமாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அத்துடன் கூடுதலாக, வறுமையிலிருந்து விடுதலை, அனைவருக்கும் கவுரவமான வேலை, கண்ணியமான வாழ்க்கை, சமத்துவமான சமுதாயம் அமைக்கவும் கடுமையாக உழைப்பதற்கு இந்தியாவின் 78ஆம் விடுதலை நாளில் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், “ஆங்கிலேயர்களின் அடிமைத்தளையிலிருந்தும், சுரண்டலில் இருந்து விடுதலை பெற்ற நாம், இப்போது வேறு வகையான தீமைகளுக்கு அடிமையாகி நம்மை நாமே இழந்து கொண்டிருக்கிறோம். காலநிலை மாற்றம், மது போதை, ஆன்லைன் சூதாட்டங்கள் ஆகிய தீமைகளுக்கு அடிமையாகியுள்ளோம். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற நாம், இப்போது இந்த தீமைகளுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது. இந்தத் தேவைகளை புரிந்து கொண்டு இயற்கையை மதிக்கக்கூடிய இந்தியாவை உருவாக்கவும், போதை, மது, சூது ஆகிய மூன்று சமூகக் கேடுகளையும் முற்றிலுமாக ஒழிக்கவும் இந்த நாளில் அனைத்து மக்களும் உறுதியேற்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், “வேலையில்லா திண்டாட்டம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருகி உள்ளது. தொழிலாளர்களுடைய உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றன. வேலையில் நிரந்தரத் தன்மை ஒழிக்கப்படுகிறது. வேலைக்கும், ஊதியத்துக்கும், சமூக பாதுகாப்புக்கும் இருந்த உத்தரவாதம் அகற்றப்பட்டுவிட்டது. உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட இந்தியாவில், அவர்களது எதிர்காலம் இருள் மயமாக்கப்படுகிறது.

இந்திய மக்கள் முன்புள்ள இவ்வளவு சவால்களையும் எதிர்கொண்டு, அனைவருக்கும் வாய்ப்புகளை பகிர்ந்து, எல்லோரும் ஒன்றாக முன்னேறுவது இந்திய விடுதலைப் போராட்டத்தைப் போன்றே, இன்னொரு தவிர்க்க இயலாத போராட்டமாகும். நமது தாய் திருநாட்டின் விடுதலையை தக்க வைத்துக் கொள்ள, விடுதலைப் போராட்டத்தின் பயன்கள் ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்க, தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என இந்த 78வது விடுதலைத் திருநாளில் சபதம் ஏற்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், “இந்திய மண்ணிலிருந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விரட்டிட நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில், தன்னலமற்ற தியாகிகள் பலர், எந்தவித பலனையும் எதிர்பாராமல், தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழந்து பாரத நாடு விடுதலைப் பெற்றிட வழிவகை செய்தனர். இப்படிப்பட்ட தியாகச்சீலர்களின் அர்ப்பணிப்பினைப் போற்றி, நாடு வளம் பெற சாதி மத பேதங்களை கடந்து ஒற்றுமையுடன் அனைவரும் வாழ்ந்திட வேண்டும். 'நாடு உனக்கு என்ன செய்தது என்பதைவிட நீ நாட்டிற்கு என்ன செய்தாய்?" என்பதற்கேற்ப பெற்ற விடுதலையை நாம் அனைவரும் பேணிக் காக்க வேண்டும். "பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்னும் மகாகவி பாரதியாரின் பொன்மொழியைப் போற்றிப் பரப்பி, அனைவரும் உழைத்துப் பாரதம் பாரினில் சிறக்கப் பாடுபடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Independence Day
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment