நாடு முழுவதும் 2024 ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டை வரவேற்று மக்கள் கொண்டாடினர். குறிப்பாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட ஹோட்டல்கள் மற்றும் பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சென்னையில் பாதுகாப்பிற்காக 18,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், நீலாங்கரை ஆகிய கடற்கரை பகுதிகளில் இரவு 7 மணிக்கு பிறகு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்களும், பொதுமக்களும் செல்லாத வகையில் இரும்பு தகடுகள் கொண்டு மூடப்பட்டது. மெரினா காமராஜர் சாலையில் இரவு 8 மணியளவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் காமராஜர் சாலையில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே மணிக்கூண்டு இருந்த பகுதி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மணி சரியாக 12 ஆனதும் அனைவரும் ஒன்று சேர்ந்து 'ஹேப்பி நியூ இயர்' என்று உற்சாகமாக குரல் எழுப்பி தெரிவித்தனர். மக்கள் ஒருவருக்கெருவார் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். கேக் வெட்டியும், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். அதே போல் தேவாலயங்களிலும் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“