சிவகங்கை மாவட்டம், பள்ளத்துரை அருகே உள்ள கொத்தரி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (56) என்ற கொட்டகை அமைக்கும் தொழிலாளி, 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வேலைக்காக அருகிலுள்ள கிராமத்திற்கு சென்றபோது, 10-ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.
இதுகுறித்து காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பழனிச்சாமியை கைது செய்து, சிவகங்கை போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், பழனிச்சாமி குற்றவாளி என தீர்ப்பளித்தார்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒரு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்தார். சிறுமியை கர்ப்பமாக்கியதற்காக மேலும் ஒரு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
இந்த இரண்டு தண்டனைகளையும் அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.