தமிழகத்தில் நடமாடும் நகைக்கடையாக வலம் வந்த ஹரி நாடார் மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள நிலையில், அவரை நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில், கைது செய்ய சென்னை போலீஸ் பெங்களூரு போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
பனங்காட்டுப் படை கட்சி தலைவர், சினிமா பைனான்ஸியர் என்று வலம் வந்த ஹரி நாடார் சினிமாவில் நடிகராகவும் களம் இறங்கினார். ஹரி நாடார் என்றாலே கிலோ கணக்கில் அவர் அணிந்திருக்கும் நகைகள்தான் முதலில் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.
இந்த சூழலில்தான், கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் சாஸ்திரி என்பவர் தனக்கு ஹரி நாடார் வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7.2 கோடி ரூபாய் கமிஷனாகப் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகார் அளித்டார். இந்த புகாரின் பேரில், கடந்த ஆண்டு மே மாதம் ஹரி நாடார் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கபட்டுள்ளார்.
இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி, சீமானுக்காக ஹரி நாடார் தன்னை மிரட்டுவதாக அளித்த புகாரில், பெங்களூரு சிறையில் இருக்கும் ஹரி நாடாரை கைது செய்ய சென்னை போலீஸ் பெங்களூரு போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நடிகை விஜயலட்சுமி தமிழ் சினிமாவில் ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவர் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளப் படங்களில் நடித்துள்ளார். நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
மேலும், சீமான் தொந்தரவு தாங்க முடியவில்லை சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி, ஜூலை, 2020-ல் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். பின்னர், அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, எழும்பூர் மாஜிஸ்திரேட் நடிகை விஜயலட்சுமியிடம், வாக்குமூலம் வாங்கினார்.
நடிகை விஜயலட்சுமி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து தர்ணாவில் ஈடுபட்டார். தனது உடல் நலம் முழுமையாக சரியாகாத நிலையில், திடீரென தனனி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி விட்டதாகவும், சீமானுக்காக ஹரி நாடார் தன்னை மிரட்டுவதாகவும், சீமான், ஹரி நாடாரை இருவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதுதொடர்பாக, விஜயலட்சுமி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விஜயலட்சுமி அளித்த புகார் குறித்து திருவான்மியூர் போலீஸார் தற்போது மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதனால், மோசடி வழக்கில் கைதாகி,பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாரை, விஜயலட்சுமி வழக்கில் கைது செய்ய அனுமதிக்க கோரி பெங்களூரு போலீஸாருக்கு திருவான்மியூர் ஆய்வாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனால், நடிகை விஜயலட்சுமி வழக்கில், பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாரை தூக்க சென்னை போலீஸ் பெங்களூரு போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"