Hari Nadar wrote letter wife and describes Bengaluru police torture: மோசடி வழக்கில் கைதாகி கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரி நாடாரை போலீசார் நிர்வாணமாக வீடியோ எடுத்து விசாரிப்பதாகவும், ஜாமீன் வழங்காமல் சித்ரவதை செய்வதாகவும் அவர் தனது மனைவிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ஹரி நாடார், பனங்காட்டுப்படை என்ற கட்சியை நடத்தி வருகிறார். இவர் கிலோ கணக்கில் நகை அணிந்து வலம் வந்ததன் மூலம் நடமாடும் நகைக்கடை என பெயர் எடுத்தவர். மேலும், தேர்தலில் போட்டியிட்டப்போது பிரமாண்ட பிரச்சாரம் மூலமும் கவனம் ஈர்த்தவர். இதனிடையே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி ஆகிய இருவருக்கு இடையிலான பிரச்சனையில் விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஹரி நாடார் மீது புகார் எழுந்தது.
இதையும் படியுங்கள்: சென்னையில் பெண்களுக்காக பிரத்யேகமான இளஞ்சிவப்பு நிற பேருந்துகள்
மேலும், பெங்களூரைச் சேர்ந்த, கட்டுமான நிறுவனர் வெங்கட் ரமணி என்பவரிடம் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.7 கோடி வரை மோசடி செய்ததாக ஹரி நாடார் மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஹரி நாடாரை கைது செய்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில், சிறையில் இருக்கும் ஹரி நாடார் தனது முதல் மனைவி ஷாலினியிடம் விவாகரத்து கோரி, அனுப்பிய 64 பக்க கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கடிதத்தில் ஹரி நாடார் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் தமக்கு முதல் மனைவி ஷாலினியுடன் வாழ பிடிக்கவில்லை என்றும், இரண்டாவது மனைவி மஞ்சுவுடன் இணைந்து வாழவே தாம் விரும்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
மேலும், தாம் கைது செய்யப்பட்ட பின்னர் பெங்களூரு போலீசார் வெங்கட் ரமணியிடம் கமிஷனாக பெற்றத்தொகையை திருப்பி கொடுக்குமாறு தெரிவித்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும்போது, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்த, பிரமாண பத்திரத்தில் என்னிடம் ஆறு கார்கள் இருப்பதாக அறிந்த போலீசார், அந்த கார்களை உடனடியாக சரண்டர் செய்ய கூறியுள்ளனர். அந்த கார்கள் தற்போது ராக்கெட் ராஜாவிடம் உள்ளதாக கூறியதாக தெரிகிறது.
ராக்கெட் ராஜா பற்றி கேட்டப்போது, நாங்கள் இருவரும் இணைந்து பனங்காட்டுப்படை என்ற கட்சியை நடத்தி வருவதாக தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ராக்கெட் ராஜா தரப்பினரிடம் 6 கார்களையும், காவல்துறையினரிடம் ஒப்படைக்கும்படி ஹரி நாடார் தகவல் கொடுத்துள்ளார். ஆனால் ராக்கெட் ராஜா தரப்பில் எந்த பதிலும் வராமல் இருந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெங்களூரு, குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஜெகன்நாத் ராய் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் ஹரி நாடாரை அரை நிர்வாணப்படுத்தி அடித்துள்ளனர். பின்னர் பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, முழு நிர்வாணமாக நிற்க வைத்து அடித்து கொடுமைபடுத்தியதாக கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
அதேநேரம், தம்மை முழு நிர்வாணப்படுத்தி அடித்ததோடு மட்டுமில்லாமல், அதனை துணை ஆணையர் தனது மொபைல்போனில் வீடியோ, போட்டோ எடுத்தது தொடர்பாக பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக மாநில டி.ஜி.பி.,க்கும் ஹரி நாடார் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.