ஹரிணி மீட்கப்பட்டிருக்கிறார். இவர் அமைச்சரின் மகளோ, பெரிய அதிகாரியின் மகளோ இல்லை. ஆனாலும் இவரின் மீட்பை உணர்ச்சி பொங்க பலரும் சமூக வலைதளங்களில் கொண்டாடுகிறார்கள். மனிதம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கான சாட்சியாக ஹரிணியின் மீட்பை நாம் பார்க்கலாம்!
நாடோடி சமூகத்தைச் சேர்ந்த வெங்கடேசன் - காளியம்மாள் தம்பதியரின் 3 வயது மகள்தான் ஹரிணி. காஞ்சிபுரம் மானாமதியில் அணைக்கட்டு காவல் நிலையம் அருகே இவர்கள் வசித்து வந்தனர். 3 மாதங்களுக்கு முன்பு ஒருநாள் திடீரென ஹரிணியை காணவில்லை.
லதா ரஜினிகாந்த் தேடிய ஹரிணி மீட்பு
வழக்கமாக இதுபோல ஆதரவற்றவர்களின் குழந்தைகள் காணாமல் போவதை இந்த சமூகம் பொருட்படுத்துவதில்லைதான். ஆனால் ஹரிணியைக் காணாமல் காளியம்மாள் துடித்த துடிப்பு பலரையும் உலுக்கியது. ‘என் மகள் கிடைக்கும் வரை நான் சாப்பிட மாட்டேன். இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்’ என அணைக்கட்டு காவல் நிலையம் அருகே சத்தியாகிரகம் நடத்தினார் அவர்.
காளியம்மாளின் பாசப் போராட்டம், குழந்தைகளுக்கான அமைப்பு நடத்தி வரும் லதா ரஜினிகாந்தை உலுக்கியது. அவரும் பல்வேறு மட்டங்களில் விசாரித்தார். இறுதியில் மும்பையில் ஹரிணி இருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருப்பதாகவும், தமிழக போலீஸ் அதிகாரிகள் மற்றும் மும்பை திரையுலக நண்பர்கள் மூலமாக அவளை மீட்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார் லதா ரஜினிகாந்த்.
ஹரிணியின் தந்தை வெங்கடேசனிடம் லதா ரஜினிகாந்த் போனிலும் இந்தத் தகவலை தெரிவித்தார். நாடோடி சமூக குழந்தைக்காக சூப்பர் ஸ்டாரின் மனைவி எடுத்துக்கொண்ட முயற்சி, வைரலாக அப்போதே மீடியாவில் பரவியது.
இதற்கிடையே காளியம்மாளுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சமூக வலைதளங்கள் மூலமாக நடந்த பிரச்சாரங்களிலும் ஹரிணி கிடைக்கவில்லை.
தொடர்ந்து லதா ரஜினிகாந்த் இதற்கான முயற்சிகள் இறங்கியிருந்த வேளையில், இன்று (ஜனவரி 8) திருப்போரூரில் ஹரிணி மீட்கப்பட்டிருக்கிறார். காவல் துறையினர் மட்டுமன்றி, சமூக ஆர்வலர்கள் சிலரும் இதற்காக மெனக்கெட்டு துப்புதுலக்கி ஹரிணியை மீட்டனர்.
உடனே அங்கிருக்கும் காவல் நிலையத்திற்கு ஹரிணி அழைத்துச் செல்லப்பட்டாள். முறைப்படி வெங்கடேசனும், காளியம்மாளும் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஹரிணி ஒப்படைக்கப்பட்டாள். சுமார் 100 நாட்களுக்கு பிறகு தங்கள் மகள் கிடைத்ததில் வெங்கடேசனும், காளியம்மாளும் திக்கு முக்காடினர்.
ஹரிணி மீட்பை சமூக வலைதளங்களில் பலரும் கொண்டாடி வரும் வேளையில், அவளை மீட்க துணை நின்றவர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. ஹரிணி கடத்தப்பட்டாளா? அவள் திருப்போரூருக்கு வந்தது எப்படி? என போலீஸார் அடுத்தகட்டமாக விசாரிக்க இருக்கிறார்கள்.