பொது இடத்தில் கருணாநிதி சிலை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா? – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்

கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா என தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் வேலுார் மாவட்டம் கைனுார் கிராமத்தில் அம்பேத்கர் சிலை வைப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டுமெனவும், அனுமதி பெற்ற சிலைகளை தலைவர்களின் சிலை பூங்கா அமைத்து பராமரிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த திருமுருக தினேஷ், நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், ‘திருப்பூர் ரயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது, உயர் நீதிமன்ற உத்தரவை மீறுவது போலாகும்’ என்று கூறியுள்ளார்.

இந்த கடிதத்தை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த வழக்குடன் இணைத்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக பொது இடத்தில் சிலை வைக்க யாரும் முடிவெடுத்துள்ளார்களா? சிலை வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலாளர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் இருந்து விளக்கம் பெறும்படி, கூடுதல் அரசு பிளீடர் எம்.ராஜேந்திரனுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Has permission been granted for m karunanidhi statue in tirupur asks hc

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com