சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

தஷ்வந்த்தின் தூக்கு தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

By: Updated: July 10, 2018, 04:48:28 PM

சிறுமி ஹாசினி கொலை வழக்கில், குற்றவாளி தஷ்வந்த் மேல்முறையீடு செய்த வழக்கில், தூக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

சென்னையை அடுத்த மாங்காட்டை அடுத்த மெளலிவாக்கம் மாதா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பாபு (35). இவர் பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களது மகள் ஹாசினி 6 வயது. இவர் கடந்த ஆண்டு (2017) பிப்ரவரி 5 ஆம் தேதி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஹாசினி திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் மாங்காடு காவல்துறை வழக்குப் பதிவு செய்து ஹாசினியைத் தேடி வந்தனர்.

விசாரணையில் அதே குடியிருப்பில் வசிக்கும் குன்றத்தூர் சம்பந்தன் நகர் ஸ்ரீராம் சாலைப் பகுதியைச் சேர்ந்த சேகர்-சரளா தம்பதியின் மகன் தஷ்வந்த் (22), சிறுமி ஹாசினியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததும், பின்னர் கொலை செய்து விட்டு, சடலத்தை துணிப் பையில் திணித்து வெளியே எடுத்துச் சென்று தாம்பரம்-மதுரவாயல் புறவழிச் சாலையில் அனகாபுத்தூர் அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக மாங்காடு காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்து தஷ்வந்தை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

பின்னர் அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி ரத்து செய்தது.

இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தஷ்வந்த் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி தனது தாய் சரளாவிடம் பணம் மற்றும் பீரோ சாவி கேட்டு மிரட்டினார். அவர் மறுக்கவே தாயைக் கொலை செய்து விட்டு 25 பவுன் நகைகளுடன் மும்பைக்கு தப்பிச் சென்று தலைமறைவானார்.

இதையடுத்து தனிப்படை காவல்துறை மும்பை சென்று தஷ்வந்தை டிசம்பர் 6 ஆம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில் ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். அரசு தரப்பில் முக்கிய சாட்சிகளாக 30 பேர் விசாரிக்கப்பட்டனர். 42 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

விசாரணை முடிவடைந்து, நீதிபதி வேல்முருகன் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி அளித்த தீர்ப்பில், தஷ்வந்த் மீதான குற்றம் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டதாகவும், ஹாசினியைக் கடத்தியது, துன்புறுத்தியது, பாலியல் வன்கொடுமை செய்தது, சடலத்தை எரித்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக அதற்கான சட்டப்பிரிவுகளின் கீழ் தஷ்வந்துக்கு 36 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கொலை செய்த குற்றத்துக்காக தூக்கு தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பிறப்பித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டு என கோரி தஷ்வந்த் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் எனக்கு எதிரான விசாரணையில் சான்றுப் பொருட்களை பறிமுதல் செய்ததில் தவறுகள் நடந்ததாகவும், சாட்சிகள் முன்னுக்குப் பின் முரணாக வாக்குமூலம் அளித்ததாகவும் அதனை விசாரணை நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டதாகவும் எனவே தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விசாரணை நீதிமன்றம் அனுப்பிவைத்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.விமலா, எஸ்.ரமாதிலகம் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் விதித்த தூக்குதண்டனையைஉறுதி செய்வதாகவும் தஷ்வந்த் மீதான குற்றசாட்டு விசாரணை நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபிக்கபட்டுள்ளது. எனவே விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தஷ்வந்த் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இருப்பினும், தஷ்வந்த் சார்பில் சிறப்பு மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Hasini case dhasvanth high court tamilnadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X