22 வருட ராணுவ அர்ப்பணிப்பு: ஹவில்தார் பழனி எல்லையில் வீர மரணம்

தனது தங்கைக்கும், தம்பிக்கும் கிட்டத்தட்ட ஒரு தகப்பன் ஸ்தானத்தில் செயல்பட்டவர். உயிரிழந்த பழனிக்கு வானதிதேவி என்ற மனைவி, பிரசன்னா என்ற 10 வயது மகன்,  திவ்யா என்ற 8 வயது மகளும் உள்ளனர்.

By: Updated: June 17, 2020, 12:33:12 PM

லடாக் எல்லைப் பகுதியில் சீன இராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் – கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் பழனி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழக மக்களை மிகுந்த வேதனை அடைய வைத்துள்ளது.

யார் இந்த பழனி:  

தனது 18  வயதில் ராணுவத்தில் சேர்ந்தவர். ராணுவத்தின் மீதான இவரின் ஈடுபாட்டிற்கு தேசப்பற்று முக்கிய காரணமாக இருந்தது. விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், வறுமை, குடும்ப சூழலும் ராணுவத்தில் சேர பிற முக்கிய காரணியாக அமைந்தது. தனது தங்கைக்கும், தம்பிக்கும் கிட்டத்தட்ட ஒரு தகப்பன் ஸ்தானத்தில் செயல்பட்டவர்.

உயிரிழந்த பழனிக்கு வானதிதேவி என்ற மனைவி, பிரசன்னா என்ற 10 வயது மகன்,  திவ்யா என்ற 8 வயது மகளும் உள்ளனர். தனது இளைய தம்பியை ராணுவத்தில் சேர்த்தது போலவே, தனது மகனையும் ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று பழனி விரும்பியுள்ளார்.

22 வருட ராணுவ சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பழனி, அடுத்த வருடம் ஓய்வு பெற இருப்பதாக தனது குடும்பத்தாரிடம் சொல்லியுள்ளார்.

விடுமுறை நாட்களில் தனது சொந்த கிராமத்தில் பழனியின் தருணங்களை ஊர் மக்கள் தற்போது நினைவு கூர்ந்து வருகின்றனர். அரசியல் நிகழ்வுகள், பொது அறிவு, உலக நடப்புகள் என அனைத்திலும் அவரின் பேச்சு அவ்வளவு தெளிவாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

ராணுவத்தில் கவச வாகனம் ஓட்டுவதில் மிகவும் கை தேர்ந்தவராக பழனி  கருதப்படுகிறார். இவரின் அனுபவங்களையும்,திறமைகளையும் நன்கு அறிந்த ராணுவ அதிகாரிகள்,ஓய்வு பெறும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டிருகின்றனர்.

பழனியின் 22 ஆண்டு கால ராணுவ அர்ப்பணிப்பின் பயனாக, ராமநாதபுரத்தை அடுத்துள்ள கழுகூரணி  கஜினி நகர் பகுதியில் புதிய வீடு கட்டியுள்ளனர் பழனி குடும்பத்தினர். கடந்த 13ம் தேதி தான் புது வீட்டின்  கிரகப்பிரவேசம் நடந்ததாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.

அடுத்த வருடம் ஓய்வு பெற்று விடுவார், தனது உழைப்பில் கட்டிய வீட்டில் அடுத்தக் கட்ட வாழ்க்கையை ஆரம்பிப்பார் என்று நம்பிய பழனியின் குடும்பத்தினருக்கு லடாக் எல்லைப் பகுதியில் நடந்த சம்பவம் சொல்லண்ணா துயரங்களை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Havildar palani from ramanathapuram district plans to retire next year

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X