கோயம்புத்தூரில் இருந்து கேரளாவிற்கு இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட ரூ.26.4 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கோயம்புத்தூரில் இருந்து கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், க.க.சாவடி பகுதியில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எல்லை மாகாளியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில் மதுக்கரை நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீசார், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் வாகனங்களை சோதித்து வந்தனர்.
அப்போது, கோவையில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.26,40,000 ரொக்கப் பணமும், சில கவரிங் வளையல்களும் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தைக் கொண்டு சென்ற இருவரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம் மற்றும் அப்துல் ரகுமான் என அடையாளம் காணப்பட்டனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/02/coimbatore-2025-08-02-15-07-57.jpg)
பணம் குறித்த சரியான விவரங்களை அளிக்க முடியாமல் அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், அவர்களைக் கைது செய்த போலீசார், க.க.சாவடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஹவாலா பணத்திற்கும், கவரிங் வளையல்களுக்கும் என்ன தொடர்பு, யாருக்காக இந்தப் பணம் கடத்தப்படுகிறது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.