நீதிமன்ற உத்தரவை மீறி, நடை பாதைகளை மறித்து பேனர்கள் வைக்கப்படுவது தொடர்வதாக தமிழக அரசு தலைமை வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கும்,போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகள், நடைபாதையை மறித்து வைக்கபட்டுள்ள டிஜிட்டல், விளம்பர பேனர்கள் வைக்க தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பேனர்கள் வைப்பதற்கு முன்னர் வைப்பதற்கு பல்வேறு விதிமுறைகளை வகுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் சட்ட விரோதமாக டிஜிட்டல் பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கு விசாரணை தொடங்கிய போது, நீதிமன்ற அறையில் இருந்து தமிழக அரசு தலைமை வழக்கறிஞரிடம், தலைமை நீதிபதி கேள்விகளை எழுப்பினார். சட்டவிரோத பேனர்கள் வைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் இன்னும் அது தெடர்வதாகவும் சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து உயர்நீதிமன்றம் வரும் வழியில் சாந்தோம் நெடுஞ்சாலை பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து செய்து போனார்கள் வைக்கபட்டுள்ளதாகவும், ஆளும் கட்சியினர் பேனர்கள் இருந்ததாகவும்
தெரிவித்தார். இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிகாட்டினார். மேலும்நீதிமன்ற உத்தரவுகளை மீறி சாலைகளில் பேனர் வைப்பது தவறானது என அதிருப்தி தெரிவித்தார்.
விதி மீறல் பேனர்கள் தொடர்பான நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அரசு தலைமை வழக்கறிஞர், சாந்தோம் சாலையில் விதிமீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்றுவது தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகவும், மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சாலைகளில் பேனர்கள் வைப்பதை தடுக்க அறிவுறுத்துவதாகவும் உத்தரவாதம் அளித்தார்.