scorecardresearch

பி.ஆர்க் படிப்பில் சேர்க்கை மறுக்கப்பட்ட விவகாரம்: மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பி.ஆர்க் படிப்பில் சேர ‘நாட்டா’ தகுதித் தேர்வு தேவையில்லை என அறிவித்த பிறகும், நாட்டா தகுதி தேர்வு அவசியம் எனக் கூறி கடந்த 2017ஆம் ஆண்டு மாணவிக்கு சேர்க்கை மறுக்கப்பட்ட வழக்கில், மாணவிக்கு, அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை செயலாளர் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பி.ஆர்க் படிப்பில் சேர்க்கை மறுக்கப்பட்ட விவகாரம்: மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பி.ஆர்க் படிப்புக்கு ‘நாட்டா’ (NATA) தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என ஆர்கிடெக்சர் கவுன்சில் கடந்த 2008ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும் பல மாநிலங்களில் நாட்டா தகுதித் தேர்வு கட்டாயம் என கூறி வந்த நிலையில், ஆர்கிடெக்சர் கவுன்சில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையில், பிஆர்க் படிப்புக்கு நாட்டா தகுதித் தேர்வு கட்டாயம் இல்லை என்றும், ஜேஇஇ உள்ளிட்ட தகுதித்தேர்வுகளின் அடிப்படையில் பிஆர்க் சேர்க்கை வழங்கலாம் என தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் ஜேஇஇ தேர்வில் 390 மதிப்பெண்களுக்கு 226 மதிப்பெண்கள் பெற்ற அம்ருதா என்ற மாணவி, 2017-18ஆம் கல்வியாண்டில் நாட்டா தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக் கூறி அவருக்கு பிஆர்க் படிப்பில் சேர்க்கை மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து மாணவி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்க கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் 2017ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் நேற்று(செப்.9) விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது, பிஆர்க் படிப்புக்கு நாட்டா தகுதித்தேர்வு தேவையில்லை என 2017 ஜூன் 15 அன்று ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த படிப்புக்கு நாட்டா
தகுதி தேர்வு அவசியம் என 2017 ஜூன் 25 அன்று அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டது ஏற்புடையதல்ல.

நாட்டா தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்புக்கு 2008ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பிஆர்க் படிப்புக்கு ஜேஇஇ உள்ளிட்ட தகுதித் தேர்வி்ல் வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசும் உத்தரவிட்டுள்ளது.

அறிவுசார் ஆணவக்காரர்களின் கைகளில் கல்வி

ஆனால் இதை எதையுமே கருத்தில் கொள்ளாமல் மனுதாரருக்கு சேர்க்கை மறுக்கப்பட்டுள்ளது. கல்வி தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் இருக்கும் கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதற்கு இந்த வழக்கு ஓர் உதாரணம். கல்வி என்பது வாழ்வாதாரத்துக்கு தேவையான தகுதியை வழங்குவது மட்டும் அல்ல, சமூகம் அங்கீகரிக்கும் வகையில் ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதும் கல்வி தான்.

ஆனால் சமீப காலமாக அந்தகல்வி வணிகமயமாகி தகுதியில்லாத நபர்களின் கைகளிலும், அறிவுசார் ஆணவக்காரர்களின் கைகளிலும் விழுந்துவிட்டது. இவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளால் பல மாணவர்களின் எதிர்காலம் வீணாகி வருவது வேதனைக்குரியது.

எனவே பிஆர்க் படிப்பில் சேர்க்கை மறுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.10 லட்சத்தை இழப்பீடாகவும், ரூ. 1 லட்சத்தை வழக்கு செலவுத் தொகையாகவும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செயலாளர் 4 வாரங்களில் வழங்க வேண்டும். தவறினால் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் கடந்த 2017 முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Hc directs engg admissions secretary to shell out rs 10 lakh to student

Best of Express