ஏ.பி.வி.பி. முன்னாள் தேசியத் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
அத்துடன், பொது விடுமுறை நாளில் அவரை கைது செய்தது ஏன் என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
முதல்வர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஏ.பி.வி.பி. அமைப்பினரை சிறையில் சென்று பார்த்ததற்காக இவரை அரசு பணியிடைநீக்கம் செய்தது.
இந்நிலையில், இவரது வீட்டுக்கு அருகே உள்ள ஒருவரின் வீட்டின் முன் சிறுநீர் கழித்ததாக ஆதாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
லஞ்ச பணத்துடன் சிக்கிய அதிகாரியை கைது செய்யாமல் டிரான்ஸ்ஃபர் செய்வதா? அன்புமணி கேள்வி
அதைத் தொடர்ந்து அவரை கடந்த 19-ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் சுப்பையா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் தனது தரப்பு வாதத்தை பதிவு செய்தார்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஒருவரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யும்போது அவரால் திங்கட்கிழமை வரை ஜாமீன் கோரி கோர்ட்டை அணுக முடியாது. எனவே, இதுபோன்ற கைது சம்பவம் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
இந்த ஐகோர்ட்டு மட்டுமல்லாமல், ஆந்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநில ஐகோர்ட்டுகளும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளது.
இந்த வழக்கில் உள்நோக்கத்துடன் மனுதாரரை பொது விடுமுறை நாளில் கைது செய்துள்ள விதம் அடிப்படை உரிமை மீறலாகும். எனவே, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறேன்.
போலீஸ் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தருகிறேன். விசாரணையை வரும் மார்ச் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன் என்று நீதிபதி கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil